search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அங்கீகாரமில்லாத வீட்டு மனைகனை பத்திரப்பதிவு செய்ய தடை நீட்டிப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அங்கீகாரமில்லாத வீட்டு மனைகனை பத்திரப்பதிவு செய்ய தடை நீட்டிப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

    அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்று ஐகோர்ட் இன்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கூறியிருப்பதாவது:-

    ‘தமிழகத்தில் விவசாய நிலங்களை எல்லாம் சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயம் அழிவதுடன், விவசாய நிலங்களும் அழிந்து வருகிறது. இந்த வீட்டு மனைகளும் சட்டப்படி அமைக்கப்படுவதில்லை. எனவே, தமிழகத்தில் விவசாய நிலங்களை சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவேண்டும்’ இவ்வாறு கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, விவசாய நிலங்களை சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும்போது, அந்த விற்பனை பத்திரத்தை பத்திரப்பதிவு துறை பத்திரபதிவு செய்யக்கூடாது’ என்று தடை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவினால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது.

    அதில், அக்டோபர் 20ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்த வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் இனி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது என்றும் கூறியிருந்தது.

    ஆனால், இந்த அரசாணையை ஐகோர்ட்டு ஏற்கவில்லை. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் சட்டவிரோத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை எவ்வாறு அரசு வரையறை செய்யப்போகிறது? அதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை அரசு உருவாக்கி, இந்த ஐகோர்ட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி, ‘தலைமை செயலாளருக்கு வேலைபளு அதிகம் உள்ளதால், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க கொஞ்சம் கால அவகாசம் தேவை’ என்றார்.

    அப்போது ஒரு வக்கீல் எழுந்து, ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதால், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டப்பட்ட வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டிற்காவது விலக்கு அளிக்கவேண்டும். இந்த தடை உத்தரவினால் தமிழகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.

    இதற்கு நீதிபதிகள், ‘தடை உத்தரவினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், சட்டத்தை பின்பற்றி வீட்டு மனைகளை உருவாக்கியிருந்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்காதே? இப்போது வீடுகளுக்கு விலக்கு அளிப்பது என்பது முடியாத காரியம். அப்படி விலக்கு அளித்தால், மீண்டும் பழைய நிலை வந்து விடும். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பல கூறுகளாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் விலக்கு அளிக்க முடியாது. அதனால் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும் விதமாக அரசு ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கட்டும்’ என்று கூறினார்.

    அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன் எழுந்து, ‘ஒரு ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் உருவாக்க வேண்டும் என்றால், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, விரிவான பொதுபாதை என்று அமைக்கவேண்டும். இவற்றை அமைக்க ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் செலவு ஆகும். ஆனால், இதையெல்லாம் செய்யாமல், ரியல் எஸ்டேட் அதிபர்கள், வீட்டு மனைகளை உருவாக்கியுள்ளனர். ஒருவேளை இந்த அங்கீகார மற்ற வீட்டு மனைகளை அரசு வரையறை செய்யும்போது, கழிவு நீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்க ரூ.17 ஆயிரம் கோடியை செலவு செய்யவேண்டும். இந்த நிதியை அரசு எங்கிருந்து உருவாக்கும்? எப்படி செலவு செய்யும்? என்பது குறித்து இடைக்கால மனுவை தாக்கல் செய்தேன். அந்த மனுவை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை’ என்று கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் இடைக்கால மனுவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    இதன்பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 27ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற முடியாது என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×