என் மலர்

  செய்திகள்

  144 தடை உத்தரவு எதிரொலி: மெரினா கடற்கரை வெறிச்சோடியது
  X

  144 தடை உத்தரவு எதிரொலி: மெரினா கடற்கரை வெறிச்சோடியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  144 தடை உத்தரவு எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.
  சென்னை:

  144 தடை உத்தரவு எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.

  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போராட்டம் அலங்காநல்லூரில் தொடங்கினாலும் சென்னை மெரினா கடற்கரையில் அது மையம் கொண்டிருந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டு 6 நாட்களாக வரலாறு காணாத ஒரு பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டுக் கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

  சமூக விரோதிகளும், தேச விரோதிகளும் புகுந்ததால் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் திசை திரும்பியது. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் அத்துமீறியதாக போராட்டக்காரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை போலீசார் இதை மறுத்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்டனர்.

  இந்தநிலையில் மாணவர்கள், இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெரினாவில் மீண்டும் ஒன்று கூடி போராட்டம் நடத்த உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் உலா வந்தது. போராட்டத்தில் பங்கேற்குமாறு மாணவர்கள், இளைஞர்களுக்கு தொடர்ந்து அழைப்பும் விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார் தரப்பில் மெரினாவில் யாரும் ஒன்று கூட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  மக்களோடு, மக்களாக கலந்து போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதை கண்காணிக்கும் வகையில் மெரினா கடற்கரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 12-ந்தேதி வரை அமலில் இருக்கும். இதன் காரணமாக போராட்டம், பேரணி, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபயிற்சி மேற்கொள்ளவும், பொழுது போக்கு மற்றும் சுற்றுலாவுக்காக வருவோருக்கு தடை விதிக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மெரினா கடற்கரையை இணைக்கும் அவ்வை சண்முகம் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, பாரதி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரைக்குள் நுழையும் வழிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  சென்னை மெரினா கடற்கரையில் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பதற்காக ஏராளமானோர் கூடுவது வழக்கம். ஆனால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வார விடுமுறை நாளான நேற்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் மெரினா கடற்கரை மணற்பரப்பில் ஆடுகளம் அமைத்து கிரிக்கெட் விளையாடுவார்கள். ஆனால் 144 தடை உத்தரவின் காரணமாக மெரினா கடற்கரையில் இளைஞர்களோ, சிறுவர்களோ நேற்று கிரிக்கெட் விளையாடுவதை காணமுடியவில்லை.

  அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜெயலலிதா சமாதி ஆகிய இடங்களுக்கு விடுமுறை தினங்களில் அதிக அளவில் மக்கள் வருவார்கள். ஆனால் நேற்று காலையில் மிகவும் குறைவானவர்களே அங்கு வந்திருந்தனர். காலையில் மெரினா கடற்கரையில் சிலர் வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்தனர்.

  அதன் பின்னர் மெரினா கடற்கரை பகுதி மக்கள் நடமாட்டம் இன்றியும், வழக்கமான உற்சாகமின்றி களை இழந்து காணப்பட்டது. அதே சமயம் மாலை நேரத்தில் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ளிட்ட கடற்கரையின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கூட்டம் சற்று அதிகரித்து இருந்தது.

  எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சமாதி, அண்ணா நினைவிடத்தில் மாலை நேரம் கூட்டம் அதிகரித்தது. இருப்பினும் விடுமுறை நாட்களில் வழக்கமாக இருப்பதை விடவும் குறைவான கூட்டமே காணப்பட்டது.

  எந்த ஒரு போராட்டமும் நடைபெறாத நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கை தேவையற்றது என்று பொதுமக்கள் சிலர் அதிருப்தி தெரிவித் தனர். அதே நேரத்தில் போலீசாரின் தடை உத்தரவால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டு இருப்பதாக மீனவர் கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இதுகுறித்து கடற்கரைக்கு குடும்பத்தினருடன் வந்திருந்த செங்குன்றத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கூறுகையில், “144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து பொதுமக்கள் கடற்கரைக்கு வரவில்லை என்று கருதுகிறேன். ஆனால் கடற்கரைக்கு வந்தவர்களிடம் போலீசார் எந்த கெடுபிடியும் செய்யவில்லை” என்றார்.

  இதேபோல மெரினா கடற்கரையில் உள்ள கடைக்காரர்கள் சிலர் கூறுகையில், “ தடை உத்தரவின் காரணமாக கடற்கரையில் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை விடவும் குறைந்துள்ளது. கடற்கரை கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக வருவதை விடவும் 70 சதவீதம் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது” என்றனர்.

  அண்ணாவின் 48-வது நினைவு தினம் வருகிற 3-ந் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

  144 தடை உத்தரவு அடுத்த மாதம் 12-ந்தேதி வரை அமலில் இருப்பதால் அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் அஞ்சலி ஊர்வலத்திற்கு போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்படுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 
  Next Story
  ×