என் மலர்

  செய்திகள்

  ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் எரிப்பு: கலவர காட்சி வீடியோ சிக்கியது
  X

  ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் எரிப்பு: கலவர காட்சி வீடியோ சிக்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ஐஸ் அவுஸ் போலீஸ் நிலைய எரிப்பு தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 35 பேர் கைதாகிறார்கள்.
  சென்னை:

  மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கடந்த 23-ந்தேதி காலை திடீர் என்று வன்முறை ஏற்பட்டது. மாணவர்கள் மத்தியில் ஊடுருவி இருந்த வன்முறையாளர்களை போலீசார் அப்புறப்படுத்திய போது வன்முறை வெடித்தது.

  வன்முறையின் உச்ச கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் எரிக்கப்பட்டது. அப்போது போலீஸ் நிலையத்தில் 16 போலீஸ் காரர்கள் இருந்தனர். அவர்கள் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தீயணைப்பு படையும், போலீஸ் படையும் சென்று தீயை அணைத்து உள்ளே சிக்கி இருந்த போலீஸ்காரர்களை ஜன்னல் வழியாக மீட்டனர்.

  அன்றைய தினம் சென்னையில் பல இடங்களில் மறியல், கல்வீச்சு, பஸ் உடைப்பு சம்பவங்கள் நடந்தாலும் போலீஸ் நிலைய எரிப்புதான் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

  இதையடுத்து போலீஸ் நிலைய எரிப்பில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை கூண்டோடு கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

  போலீஸ் நிலைய எரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக முக்கிய வீடியோ ஆதாரம் போலீசில் சிக்கியுள்ளது. ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் நான்கு ரோடு சந்திப்பில் அமைந்துள்ளது. இதன் எதிரே 3 திசைகளில் உள்ள கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் 3 கேமராக்களின் வீடியோவில் கலவரக் காட்சிகள் பதிவாகி உள்ளன.

  அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் கலவரக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டு போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. போலீசார் அந்த வீடியோவை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்து நவீன தொழில்நுட்ப முறையில் கலவரக்காரர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள்.

  வீடியோ காட்சிகள் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் கும்பலாக வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இன்று அல்லது நாளைக்குள் கைதாவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

  அடையாளம் காணப்பட்ட 35 பேர் தவிர வீடியோவில் பதிவாகி உள்ள மீதம் உள்ள நூற்றுக்கணக்கானோரை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

  இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  ஐஸ்அவுஸ் போலீஸ் நிலைய எரிப்பு தொடர்பான வீடியோ எங்களுக்கு முக்கிய ஆதாரமாக சிக்கியுள்ளது. கலவரக்காரர்கள் இதில் சிக்கியுள்ளார்கள். இவர்களின் பின்னணி குறித்து முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது. கலவரக்காரர்கள் திட்டமிட்டு போலீஸ் நிலையத்தை கொளுத்தி இருக்கிறார்கள்.

  வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அனைவரும் படிப்படியாக கைது செய்யப்படுவார்கள். மேலும் இந்த வீடியோ ஆதாரத்தை வழக்கு விசாரணையின் போது கோர்ட்டிலும் தாக்கல் செய்து கலவரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கிடையே போலீஸ் நிலைய எரிப்பின் போது அங்கிருந்த பெண் போலீஸ் ஏட்டு கலவரக்காரர்களால் மானபங்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார்கள்.

  சம்பவத்தன்று ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தின் முன்பு பெண் போலீஸ் ஏட்டுவும் சக போலீஸ்காரர்களுடன் பாதுகாப்பு பணியில் நின்றிருந்தார். அப்போது 200 பேர் போலீஸ் நிலையம் நோக்கி திரண்டு வந்து கல்வீசி தாக்கியதாகவும் அப்போது தன்னை போலீஸ் நிலையத்துக்குள் தள்ளி சூழ்ந்து கொண்டு மோசமாக நடந்து கொண்டனர். மானபங்கத்திலும் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

  பின்னர் போலீஸ் நிலைய இருட்டறையில் சிக்கிக் கொண்ட பெண் போலீஸ் அங்கிருந்த வயர்லெஸ் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கதறி அழுதவாறு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னரே மீட்கப்பட்டார்.

  பெண் போலீஸ் தெரிவித்த புகாரை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர். முறைப்படி அவர் புகார் செய்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
  Next Story
  ×