search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரெயில் மறியல்: பிரதமர் உறுதி அளிக்காததால் வலுக்கும் போராட்டம்
    X

    மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரெயில் மறியல்: பிரதமர் உறுதி அளிக்காததால் வலுக்கும் போராட்டம்

    ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் உறுதி அளிக்காததால் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வலுத்துள்ளது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    மதுரை:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள அசாதாரண சூழ்நிலையை விளக்கிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஆனால், நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு உள்ளதை காரணம் காட்டிய பிரதமர் மோடி, தற்போது மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.

    பிரதமர் கைவிரித்துவிட்டதால் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் திடீரென அணிவகுத்து வந்ததால் பாலத்தின் மையப்பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயிலில் ஏறிய போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

    சுமார் 3 மணி நேரமாகியும் மறியலை கைவிடாமல் போராட்டம் நீடித்தது. இப்போராட்டத்தில் பொதுமக்களும் இணைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் ரெயில் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

    இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் சேலத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

    சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இன்று விடுமுறை விடப்பட்டதால் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சாரை சாரையாக மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே மதுரையில் பிப்ரவரி 3ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை நகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் ஐந்து நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×