search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: அலங்காநல்லூரில் மீண்டும் பொதுமக்கள் போராட்டம்
    X

    இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: அலங்காநல்லூரில் மீண்டும் பொதுமக்கள் போராட்டம்

    அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    அலங்காநல்லூர்:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 21 மணி நேரமாக ஜல்லக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

    விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பின்னர் போலீசார் 10 நிமிட அவகாசம் கொடுத்தனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

    இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அவர்கள் அணி அணியாக திரண்டு அலங்காநல்லூர் வந்தனர். அங்குள்ள வாடிவாசல் அருகே பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், கைதான இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு, கைதானவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 நிமிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    தொடர்ந்து பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அலங்காநல்லூரில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இளைஞர்கள் கைதை கண்டித்து பாலமேடு அருகே உள்ள தெத்தூரில் கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். வாடிப்பட்டியிலும் ஏராளமானோர் திரண்டு மறியல் செய்தனர்.
    Next Story
    ×