என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
  X

  பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கீழக்கணவாய் கிராம பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கீழக்கணவாய் பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குடிநீர் வினியோகம் செய்யப்படலாம் என தகவல் வந்ததையடுத்து பொதுமக்கள் குடிநீர் எடுக்க காத்திருந்தனர். ஆனால் இரவு முழுவதும் காத்திருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை 5¼ மணியளவில் கீழக்கணவாய் பகுதியில் பெரம்பலூர்-செட்டிக்குளம் சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள், கீழக்கணவாய் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

  இந்த மறியல் போராட்டத்தால் அந்த சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி உள்பட அதிகாரிகள் மற்றும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  Next Story
  ×