என் மலர்

  செய்திகள்

  எழுத்தாளர் சோ மறைவு: கருணாநிதி, ஸ்டாலின் - தலைவர்கள் இரங்கல்
  X

  எழுத்தாளர் சோ மறைவு: கருணாநிதி, ஸ்டாலின் - தலைவர்கள் இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பன்முகத்தன்மை கொண்டவரும் சிறந்த எழுத்தாளருமான சோ மறைவிற்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-

  தமிழகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நகைச்சுவை கலந்து எழுதக்கூடிய அரசியல் விமர்சகருமான நண்பர் சோ ராமசாமி இன்று காலை மறைந்து விட்ட செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

  முதுபெரும் பத்திரிகை ஆசிரியரும், “புலனாய்வு பத்திரிகை”யை முதன் முதலில் துவக்கியவருமான “துக்ளக்” வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன்.

  வழக்கறிஞர், ராஜ்ய சபை உறுப்பினர், நாடக ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர் என்று பல பரினாமங்களில் பன்முகத்தன்மை கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வந்தவர். “துக்ளக்” பத்திரிகை மட்டுமின்றி ஆங்கிலத்தில் “பிக்விக்”என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் நடத்தியவர். அவர் எழுதி, அரங்கேற்றி, நடித்த மேடை நாடகங்களில் அரசியல் நையாண்டி மிகுந்த “முகமது பின் துக்ளக்” நாடகம் குறிப்பிடத்தக்கது. நெருக்கடி நிலைமையை சந்தித்து “எதிர்நீச்சல்” போட்டு “துக்ளக்” பத்திரிகையை நடத்தியவர்! தன் மனதில்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பண்பைக் கொண்ட அவர் என்னிடம் அன்பு காட்டி பழகியவர்.

  பத்திரிகை உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஆசிரியர் திரு சோ மறைவு பத்திரிகை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. திரு சோ அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை உலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:-

  பழம்பெரும் நடிகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையடைகிறேன். கலைத்துறை, பத்திரிகை மற்றும் அரசியல் துறைகளில் தன் முத்திரையை பதித்தவர் சோ. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

  பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்தவராய், நிலையான புகழுக்குரியவராய் திகழ்ந்த சோ எஸ். ராமசாமி மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், எனது சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-

  எழுத்தாளரும், நாடக உலகில் சிறப்பு முத்திரை பதித்தவருமான இனிய நண்பர் சோ இராமசாமி மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் மிகவும் வேதனைப்பட்டேன். அரசியல் ரீதியாக நான் சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தை அவர் சாடினாலும், அவரது ‘முகமது பின் துக்ளக்’ நாடகம் என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. நெருக்கடி நிலை காலத்தின் விளைவுகளைப்பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாக மத்திய அரசை விமர்சித்து எழுதினார்.

  அவர் என்னைக் கடுமையாக கிண்டல் செய்து துக்ளக் கேள்வி பதிலில் எழுதுவதை நான் மிகவும் ரசிப்பேன். என்னுடைய இலக்கிய உரைகளைப் பற்றி அவர் மிகவும் சிலாகித்துப்பாராட்டி எழுதியதை பெருமையாகக் கருதுகிறேன்.

  டிசம்பர்-5 ஆம் தேதி தமிழகத்தைக் கண்ணீரில் தவிக்க விட்டு மறைந்த முதலமைச்சர் சகோதரி ஜெயலலிதா அவர்களின் உற்ற நண்பரான எழுத்தாளர் சோ இராமசாமி அவர்களும் அதே மருத்துவமனையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் உயர் நீத்தார் என்ற செய்தி, என் உள்ளத்தை மிகவும் வாட்டுகிறது.

  அவரது குடும்பத்தினருக்கும், துக்ளக் பத்திரிகை நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ம.தி.மு.க சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  சோ ராமசாமி மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அரசியல் கருத்துக்களையும், சமூக சிந்தனையையும் மாறுபட்ட கோணத்தில் அணுகி உண்மையான கருத்தை மிக ஆணித்தரமா கவும் ஆதாரப்பூர்வமாகவும் தெரிவிப்பதில் வல்லவர். இவர் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது எனக்கு நெருங்கிய நண்பராகவும், சிறந்த அரசியல் கருத்துக்களை விவாதித்து பகிர்ந்து கொள்ளக்கூடிய மூத்த உறுப்பினராகவும் இருந்த நினைவுகளை நினைத்து பார்த்து அவருக்கு அஞ்சலியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அன்றைய அரசியல் சூழலை எழுதுவது மட்டுமல்லாமல் தன் எழுத்துக்களால் தமிழக அரசியல் சூழலையே பல முறை மாற்றியவர் . தமிழக பா.ஜ.கவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தியில்:-

  தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் சோ மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நாடகம் மற்றும் திரைப்படத்துறையில் நடிகராக, கதாசிரியராக, இயக்குனராக பல்வேறு பரிணாமங்களில் கலை உலகில் சிறந்து விளங்கி தனக்கென்று தனி முத்திரை பதித்தவர்.

  தமிழக அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் நல்ல நட்புடன் பழகிய பெருமை இவருக்கு உண்டு.

  மக்கள் தலைவர் மூப்பனாரோடு நெருங்கிப் பழகியவர். அதே பாசத்தோடும், அன்போடும் துக்ளக் ஆசிரியர் சோ என்னோடு பழகியதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

  அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கலை மற்றும் பத்திரிகைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறை அருளை வேண்டுகிறேன்.

  பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்பு மணி ராமதாஸ்:-

  தலைசிறந்த அரசியல் விமர்சகரும் துக்ளக் இதழா சிரியருமான சோ இராமசாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

  தமிழக அரசியலிலும் திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சோ இராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், துக்ளக் பணியாளர்கள் ஆகியோருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

  சோ. இராமசாமி இயற்கை எய்தினார் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கின்றது.

  அவரது மறைவு அரசியல், பத்திரிகை, திரைப்படத்துறைக்கு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் அவர் குடும்பத்தார் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்:-

  தேர்ந்த நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் என்று பல துறைகளில் தன் அறிவாற்றலால் உச்சத்தைத் தொட்ட ஆளுமை சோ ராமசாமி மரணச்செய்தி மனவருத்தத்தைத் தருகிறது.

  அவரது குடும்பத்தினருக்கும் துக்ளக் வாசகர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.

  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம்:-

  சோ. ராமசாமி பத்திரிகை உலகில் மிகப்பெரும் ஜாம்பவானாக விளங்கியவர். தன் நடிப்பிலும் அரசியல் மறைமுகமாக நையாண்டி செய்வது அவருக்கு கைவந்த கலை. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும். பத்திரிகை உறுப்பினர்களுக்கும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

  அரசியலில் தன்னை நேரிடையாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் அரசியல் ஞானியாக திகழ்ந்தவர். நடுநிலையான பத்திரிகையாளர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். நகைச்சுவை நடிப்பில் தனது பாணியில் முத்திரை பதித்தவர். சிறந்த கலைஞர், சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் நுண்ணறிவாளரை தமிழகம் இழந்து விட்டது. அவரது குடும்பத்தினருக்கு என் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி :-

  மூத்த பத்திரிகையாளர் நண்பர் ‘சோ’ இராமசாமி காலமானார் என்ற செய்தி கேட்ட மிகவும் வருத்தமும், வேதனையும் அடைகிறோம்.

  அவரது நகைச்சுவையும், நையாண்டி எழுத்துக்களும், எதிரிகளாலும் அவர் யாரைத் தாக்குகிறாரோ அவர்களாலும் ரசிக்கப் படக்கூடியவை.

  நானும், அவரும் சமரசம் செய்து கொள்ளாத கடும் கொள்கை எதிரிகள், ஆனால், ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாது, வெறுப்புக் கொள்ள முடியாது பழகிய பான்மையர்கள்.

  அவரது மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கூறுகிறோம்.

  மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா:-

  துக்ளக் ஆசிரியர் சோ இன்று காலை மரணம் அடைந்தது அறிந்து வருந்தினேன்.

  அவரது மரணம் தமிழ் பத்திரிகை உலகிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி ஒரு பெரும் வெற்று இடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், துக்ளக் ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேது ராமன், எச்.வசந்த குமார் எம்.எல்.ஏ, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×