search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவேகானந்தர் மண்டபத்துக்கு கைப்பை, சூட்கேஸ் எடுத்து செல்ல தடை
    X

    விவேகானந்தர் மண்டபத்துக்கு கைப்பை, சூட்கேஸ் எடுத்து செல்ல தடை

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்துக்கு கைப்பை, சூட்கேஸ் எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை மறுநாள் (டிசம்பர் 6) வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் கன்னியாகுமரியில் குவிந்து வருகிறார்கள். இதனால், கன்னியாகுமரியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கடல்நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே படகில் ஏற்றப்படுகிறார்கள். இதற்காக படகுதுறையில் டிக்கெட் எடுக்கும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் கைப்பை, சூட்கேஸ் போன்ற பொருட்களை படகில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பை, சூட்கேஸ் போன்ற பொருட்களை படகுதுறையில் உள்ள பாதுகாப்பு அறையிலேயே வைத்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இதுபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் மெட்டல் டிக்டெக்டர் வாயில் வழியாகவே அனுப்பப்படுகிறார்கள். மேலும், வாயிலில் போலீசார் நிறுத்தப்பட்டு பக்தர்களின் உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள்.

    இதுதவிர கன்னியாகுமரி கடற்கரை, காந்தி மண்டபம் ரோடு, கலங்கரை விளக்கம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ் தலைமையில் 4 குழுவினர் நவீன படகுகளில் கடலில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி– முட்டம், முட்டம்– நீரோடி, கன்னியாகுமரி –உவரி, உவரி– கூடங்குளம் என 4 பிரிவுகளாக பிரித்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும் அவர்கள் சோதனை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×