search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுங்க சாவடியில் பழைய ரூபாய்கள் வாங்க மறுப்பு: டிரைவர்- ஊழியர்கள் வாக்குவாதம்
    X

    சுங்க சாவடியில் பழைய ரூபாய்கள் வாங்க மறுப்பு: டிரைவர்- ஊழியர்கள் வாக்குவாதம்

    சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பழைய ரூபாய் நோட்டு பிரச்சினையில் வாகன ஓட்டுனர்களுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    வடமதுரை:

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு அந்த நோட்டுகளை வங்கியிலும் பெட்ரோல் பங்குகளில் மட்டுமே செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவு வரை சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று இரவு முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள பொன்னம்பல பட்டியிலும் திண்டுக்கல்லை அடுத்த கொடைரோட்டிலும் டோல்கேட் உள்ளன. இந்த மையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி அனைத்து வாகன ஓட்டுனர்களும் 500 ரூபாய் நோட்டுகளையே கொடுத்தனர்.

    கார் போன்ற வாகனங்களுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.275 வசூலிக்கப்படுகிறது. கனரக வாகனங்களுக்கு 500 ரூபாய் பெற்றுக் கொண்டு மீதி பணம் கொடுத்த ஊழியர்கள் ரூ.90-க்கு 500 ரூபாய் கொடுத்த வாகன ஓட்டுனர்களுக்கு சில்லரை தர முடியவில்லை.

    இதனால் வாகன ஓட்டுனர்களுக்கும் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று எழுதி வைத்து விட்டு ஏன் வாங்க மறுக்கிறீர்கள்? என வாகன ஓட்டுனர்கள் தகராறு செய்தனர். அனைவரும் 500 ரூபாயாக கொடுத்தால் சில்லரைக்கு எங்கே செல்வது என டோல்கேட் ஊழியர்களும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வாகனங்கள் உடனுக்குடன் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அதன் பிறகு சிலர் அடுத்தடுத்து 2 பாயிண்டுகளுக்கு மொத்தமாக கட்டணத்தை செலுத்தி விட்டு நகர்ந்து சென்றனர். ஆனால் இது போல் செல்ல இயலாதவர்கள் மிகுந்த தவிப்புக்குள்ளானார்கள். இரவு சாரல் மழை பெய்தபடி இருந்ததால் வாகனத்தில் இருந்து வெளியே வரவும் முடியாமல் குழந்தைகளுடன் வந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

    Next Story
    ×