search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சவரம்பை தளர்த்தி பயனில்லை: வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீடிப்பதால் மக்கள் அவதி
    X

    உச்சவரம்பை தளர்த்தி பயனில்லை: வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீடிப்பதால் மக்கள் அவதி

    ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளிலும் தேவையான அளவிற்கு பணம் எடுக்கலாம் என்று கூறியபோதும் வங்கிகளில் இன்றும் பணத்தட்டுப்பாடு நீடிப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    சென்னை:

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து நாட்டில் சில்லரை தட்டுப்பாடும், பணப்பிரச்சினையும் எழுந்துள்ளது.

    வங்கிகளும் ஏ.டி.எம். மையங்களிலும் போதுமான அளவிற்கு பணம் இல்லாததால் முடங்கி கிடக்கின்றன. தேவையான அளவிற்கு புதிய ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    கடந்த 20 நாட்களாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு இன்னும் முடிவு ஏற்படவில்லை. பொதுமக்கள் காலையிலேயே வங்கி வாசல்களில் வரிசையில் காத்து கிடந்தாலும் பணம் கிடைப்பது இல்லை.

    வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் கணக்கில் இருந்து எடுத்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு இருந்தபோதும் அந்த தொகையினை சாதாரண ஏழை-எளிய மக்களால் எடுக்க முடியவில்லை.

    திருமணம் போன்ற விசே‌ஷங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை கணக்கில் எடுக்கலாம் என்று அறிவித்த போதிலும் அவற்றையும் பெற முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

    திருமண, சுப காரியங்களை வைத்துள்ள குடும்பங்கள் தங்களது கணக்கில் இருந்து உச்ச வரம்பு தொகையினை எடுப்பதில் பல்வேறு விதிகளை விதித்து இருந்தாலும் வங்கிகளில் பணம் இல்லாததால் மிகுந்த கஷ்டப்படுகின்றனர்.

    நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரம் ரூ.50 ஆயிரம் வரை எடுக்க அனுமதி இருந்தபோதும் பணத்தட்டுப்பாட்டால் பணம் பெற இயலவில்லை. வங்கிகளில் 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் பணத் தட்டுப்பாடு ஏழை-எளிய மக்களை மட்டுமின்றி சிறு வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு தினமும் ரூ.10 லட்சத்திற்கு குறைவாகவே புதிய ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்படுகின்றன. இதனால் வங்கிகளில் காத்துகிடக்கும் மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு பணம் கொடுக்க முடியவில்லை. வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்காக ரூ.2000, ரூ.4000 என்ற அளவில் பிரித்து வழங்கி வருகின்றன.

    வங்கிகளில் பணம் இல்லாததால் பொது மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாய் தகராறு- மோதல்கள் பல இடங்களில் நடக்கின்றன. கணக்கில் பணம் இருந்தும் அதனை எடுக்க முடியாமல் வயதானவர்கள், பெண்கள், மாற்றுதிறனாளிகள் வரிசையில் நின்று கஷ்டப்படும் காட்சி ஒவ்வொரு வங்கிகளிலும் தற்போது காணப்படுகிறது.

    புதிய ரூ.500 நோட்டுகளும் வங்கிகளுக்கு குறைந்த அளவில் வினியோகிக்கப்படுவதால் பணத்தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் உச்சவரம்பு ரூ.24 ஆயிரம் என்பதை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. கணக்கில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்திட்டம் அனைத்து வங்கிகளிலும் இன்று முதல் நடைமுறைக்கு வந்தாலும் தேவையான அளவுக்கு பணம் எடுக்க முடியவில்லை. இதுவரையில் இருந்த உச்ச வரம்பான ரூ.24 ஆயிரத்தையே கணக்கில் இருந்து எடுக்க முடியாமல் அவதிப்படும் நிலையில் இந்த அறிவிப்பு தேவையற்றது என்று வாடிக்கையாளர்கள் புலம்புகிறார்கள்.

    அனைத்து வங்கிகளிலும் தேவையான அளவிற்கு பணத்தை எடுக்கலாம், அதற்கு எந்த உச்ச வரம்பும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறியபோதும் வங்கிகளில் இன்றும் பணத்தட்டுப்பாடு நீடித்தது. பெரும்பாலான வங்கிகளில் பணம் இல்லை என்று கூறிவிட்டனர். ஒரு சில வங்கிகளில் குறைந்த அளவில் பணம் வழங்கினார்கள்.

    ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் இந்த செயல்பாடு உள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க தவமிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கொடுத்தால் கூட போதும். ஒரு வாரம் செலவுகளை சமாளிப்போம் என்று வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர். ஆனால் வங்கிகளில் பணம் இல்லாததால் தினமும் மக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

    இதுகுறித்து கனரா வங்கி வேப்பேரி கிளை மேலாளர் கணேஷ் கூறியதாவது:-

    வாடிக்கையாளர்களுக்கு உச்ச வரம்பு தொகையான ரூ.24 ஆயிரத்தை கொடுக்கவே எங்களால் முடியவில்லை. இதில் உச்ச வரம்பை தளர்த்தி தேவையான அளவு பணம் எடுக்கலாம் என்று கூறினால் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

    ரிசர்வ் வங்கியில் இருந்து தேவையான அளவு பணம் வந்தால்தான் பொது மக்கள் கேட்கும் அளவிற்கு பணம் கொடுக்க முடியும். இல்லாத பட்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது. வங்கிக்கு இன்றும் பணம் வரவில்லை. நேற்று இருப்பை வைத்து சமாளிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×