search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் மாயமான இளம்பெண் கொலை: காதல் தொல்லை கொடுத்தவரை பிடிக்க தீவிரம்
    X

    திருப்பத்தூரில் மாயமான இளம்பெண் கொலை: காதல் தொல்லை கொடுத்தவரை பிடிக்க தீவிரம்

    திருப்பத்தூரில் மாயமான இளம்பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுமுத்து. இவரது மகள் வெண்ணிலா (வயது 23). டி-பார்ம் மருத்துவப் படிப்பு முடித்த இவர், பச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக பணியாளராக இருந்தார்.

    கடந்த 13-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற வெண்ணிலா மீண்டும் வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார். இதுகுறித்து 23-ந் தேதி திருப்பத்தூர் தாலுகா போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    வழக்கு பதிந்த போலீசார், மாயமான வெண்ணிலாவை தேடினர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காட்டுப்பகுதியில் கடந்த 20-ந் தேதி இளம்பெண் ஒருவரின் பிணம் தூக்கில் தொங்கி கிடந்தது.

    சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். உடல் மிகவும் அழுகி இருந்தது. இளம்பெண் மரத்தில் ஏறி கயிற்றை மாட்டி தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை.

    ஏனெனில் மரத்தின் உயரம் அதிகமாக உள்ளது. கிளை விளிம்பு வரை ஏறி கயிற்றை முடிச்சி போடுவது பெண்களால் முடியாத காரியமாகும்.

    மேலும் அவர் இறந்து கிடந்த வனப்பகுதியில், ஆள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். பெண்கள் அப்பகுதிக்கு செல்வதே கிடையாது.எனவே, இளம்பெண் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கொலையுண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியாமல் இருந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்தபோது, சூளகிரி காட்டில் கொலை செய்யப்பட்ட இளம்பெண், திருப்பத்தூரில் மாயமான வெண்ணிலா என்பது தெரியவந்தது. திருப்பத்தூர் தாலுகா போலீசாரும், சூளகிரி போலீசாரும் கூட்டாக சேர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். திருப்பத்தூரில் இருந்து பச்சூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வெண்ணிலா தினமும் தனியார் பஸ்சில் சென்றுள்ளார்.

    அப்போது பஸ் டிரைவர் கருணாகரன், கண்டக்டர் குட்டிப்புலி என்ற சாக்ரட்டீஸ் ஆகிய 2 பேரும் வெண்ணிலாவுக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்களில் பஸ் டிரைவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

    காதல் தொல்லை எல்லை மீறியதால் வெண்ணிலா, தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். எனவே காதல் தகராறு காரணாக வெண்ணிலா கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுதொடர்பாக கண்டக்டர்கள் குட்டிப்புலியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதையறிந்த பஸ் டிரைவர் கருணாகரன் தலைமறைவாகி விட்டார். கண்டக்டரிடம் நடத்திய விசாரணையில் வெண்ணிலா கொலையில் அவருக்கு தொடர்பில்லை என தெரிந்தது.

    விசாரணைக்கு பிறகு கண்டக்டர் குட்டிப்புலி விடுவிக்கப்பட்டார். தலை மறைவான பஸ் டிரைவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் வெண்ணிலா கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×