search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பன் பாலத்தில் கழன்று நிற்கும் போல்ட்டுகள்: போக்குவரத்து பாதிப்பு
    X

    பாம்பன் பாலத்தில் கழன்று நிற்கும் போல்ட்டுகள்: போக்குவரத்து பாதிப்பு

    பாம்பன் பாலத்தில் கழன்று நிற்கும் ‘போல்ட்டு’களால் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவையும், மண்டபத்தையும் இணைக்கும் வகையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாம்பன் பாலம் கட்டப்பட்டது. 1988-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தின் பராமரிப்பு பணியை ஏற்றனர். மண்டபத்தில் டோல்கேட் அமைத்து, வாகனங்களுக்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாலம் பராமரிப்பு மட்டும் முறையாக செய்யப்படவில்லை என பலரும் குறை கூறி வருகின்றனர்.

    பாலம் கட்டப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவ்வப்போது சேதத்தை சந்தித்து வருகிறது. பாலத்தின் ஸ்திரத்தன்மையும் சரியான நிலையில் இல்லை.

    பாலத்தை சீரமைக்க அவ்வப்போது ஒதுக்கப்படும் பணம் முறையாக செலவிடப்படாததால், அதன் சேதம் சீர்படுத்தப்படவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக நீண்ட காலமாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பெரும்பாலான நாட்கள் எரிவதில்லை. சில நாட்களில் ஒரு சில விளக்குகள் தான் எரிகின்றன. இதன் காரணமாக ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டே வருகின்றனர்.

    மேலும் சமீபகாலமாக பாலத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு தகடுகளும் சேதம் அடைந்தன. இதனால் தகடுகளை இணைக்க பயன்படுத்தும் போல்ட்டுகள் பாலத்தின் வெளியே தலை காட்டின.

    இந்த போல்ட்டுகளை கவனிக்காமல் சென்றால், சில நேரம் வாகனங்களை அவை பஞ்சர் செய்து விடுவது வாடிக்கையாகி விட்டது. இந்த சூழலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போல்ட்டுகளில் சில வழக்கத்திற்கும் மாறாக மேலே தூக்கியபடி நின்றன. இதனால் விபத்து அபாயம் உருவாகி உள்ளது.

    இதனை தவிர்க்க நல்லெண்ணம் படைத்த சிலர், அந்த பகுதியில் பேரிகார்டு வைத்து தற்காலிக தடுப்பு ஏற்படுத்தினர். இதன் காரணமாக பாலத்தில் ஒரு வழிப்பாதை போக்குவரத்தே நடைபெற்றது.

    விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேசுவரம் வந்தனர். ஆனால் பாலத்தில் ஒரு வழிப்பாதை நடைபெற்றதால், கடுமையான வாகன போக்குவரத்து ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பாலம் கட்டி 28 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதன் ஸ்திரத்தன்மை வலுவிழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாலத்தில நிறுத்தும்போது போலீசார் அதனை எடுக்க சொல்வார்கள். ஆனால் இன்று பாலத்தின் பழுது காரணமாக வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. இந்த நிலை தீர, பாலத்தின் பழுதினை விரைந்து தீர்க்க மத்திய-மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×