search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு வாரத்தில் 21 பாம்புகள் சிக்கியது
    X

    ஒரு வாரத்தில் 21 பாம்புகள் சிக்கியது

    கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் ஒரு வாரத்தில் 21 பாம்புகள் சிக்கியது. 21 பாம்புகளையும் வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அரசு கல்லூரி வகுப்பறையில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் 21 பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பகுதி வனப்பகுதியாகும். இங்கு மழை காலங்களில் அடிக்கடி பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. இந்த நிலையில் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் 21 பாம்புகளை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

    அதன்படி காவேரிப் பட்டணம், நாடுவானப் பள்ளி, குட்டி கவுண்டனூர், தொகரப் பள்ளி, பாகிமானூர், மல்லப்பாடி வாத்தியார்கொட்டாய், நாகமங்கலம், ஊத்தங்கரை ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்த 8 மலைப்பாம்புகள் மற்றும் கல்லாவி பகுதியில் 2 மலைப்பாம்புகள், வேப்பனப்பள்ளி பகுதியில் 2 மலைப்பாம்புகள் என்று மொத்தம் 12 மலைப் பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். இதில் ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, கல்லாவி ஆகிய பகுதியில் பிடிப்பட்ட 5 மலைப்பாம்புகளை அந்தந்த பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கெங்கலேரியில் உள்ள செல்வம் என்பவரது வீட்டில் இருந்த சாரைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். அத்துடன் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை வகுப்பறையில் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று, அங்குள்ள அலமாரியில் இருந்தது. அதை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி வகாப் நகரில் உள்ள கணேசன் மற்றும் கீழ்புதூரில் உள்ள பேராசிரியர் சுந்தரம் ஆகியோரது வீடுகளில் இருந்த 2 நாகப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அருகிலும், கே.ஆர்.பி அணை கூட் ரோடு அருகிலும் இருந்த 2 மண்ணுளி பாம்புகள் ஆகியவற்றையும், கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை அருகில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பையும் வனத்துறையினர் பிடித்து வந்தனர்.

    கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ் தலைமையில், வனவர்கள் தொகரப்பள்ளி சாரதி, கல்லாவி துரைகண்ணு, மகாராஜகடை வெங்கடாஜலம், வனகாப்பாளர்கள் குபேந்திரன், கோவிந்தசாமி, பிரபுதயாளன், கங்கைஅமரன், ஸ்ரீதர், முருகேசன், நாராயணன், சண்முகசுந்தரம், வனகாவலர்கள் சங்கர், சின்னசாமி, தோட்டக்காவலர் கணபதி, வேட்டை தடுப்பு காவலர் சுதாகர் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த பாம்புகளை பிடித்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்திற்கு முதலில் எடுத்து வந்தனர்.

    பிறகு அவை நாரலப்பள்ளி காப்புகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டன. இது குறித்து கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ் கூறியதாவது: -

    குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் வந்தால் பொது மக்கள் அதை அடித்து கொல்லாமல் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாங்கள் அந்த பாம்பை உயிருடன் பிடித்து காப்பு காடுகளில் விடுவோம். வன உயிரினங்களை கொல்வது சட்டப்படி குற்றமாகும். எனவே யாரும் பாம்புகளை கொல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×