search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க குழு அமைக்கப்படும்: ஐகோர்ட்
    X

    அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க குழு அமைக்கப்படும்: ஐகோர்ட்

    அண்ணா நூலகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து முறையாக பராமரிக்க வில்லை என்றால், அந்த பாரமரிப்பு பணியை மேற்கொள்ள ஒரு குழுவை அமைக்க நேரிடும் என்றும் இதுவே இறுதி எச்சரிக்கை என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணியம் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகத்தை முறையாக பராமரிக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அண்ணா நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையராக நியமித்தது. குறைகளை ஜூன் 31-ந்தேதிக்குள் சரி செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் அரசு சரி செய்து வருகிறது. அனைத்து பணிகளையும் முடிவுக்கு கொண்டுவர 2 மாதம் கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டார்.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘இந்த ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தும் நூலகத்தை முறையாக அதிகாரிகள் பராமரிக்கவில்லை. எனவே, இந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘அரசுக்கு பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டன. இப்போது கடைசி வாய்ப்பு தருகிறோம். அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்கவில்லை என்றால், அண்ணா நூலகத்தை பராமரிப்பதற்கு ஒரு குழுவை உருவாக்கி, பராமரிப்பு பணிகளை அந்த குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘இந்த ஐகோர்ட்டு கடந்த முறை எச்சரிக்கை விடுத்தும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் கூட சரிவர செய்யப்படவில்லை’ என்று கூறினார்.

    இதையடுத்து தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 14ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் நூலகத்தில் உள்ள குறைபாடுகளை களையவில்லை என்றால், இந்த நூலகத்தை பராமரிக்க ஒரு குழுவை நாங்களே (நீதிபதிகளே) உருவாக்குவோம். இது அரசுக்கு கடைசி எச்சரிக்கையாகும்’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×