search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    11 மாடி கட்டிடம் இடிப்பு: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
    X

    11 மாடி கட்டிடம் இடிப்பு: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

    11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக்கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது.

    மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை ஐகோர்ட்டில் 4.8.2014 அன்று நான் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.

    அதே நேரத்தில், இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள, இன்று இடிக்கப்பட்ட அந்த ஆபத்தான அடுக்குமாடி கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கோரிக்கை வைத்தேன். நான் தொடர்ந்த வழக்கின் மூலமாக இதற்கான சட்டப் போராட்டத்தையும் நடத்தினேன்.

    சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் உடனடியாக கட்டிடத்தை இடிக்க கோரியும், அதற்கு 2 முறை கால அவகாசம் கேட்ட அ.தி.மு.க. அரசிற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் கண்டனத்திற்கு பிறகு, ‘இன்னும் 20 நாட்களில் அந்த கட்டிடத்தை இடித்து விடுகிறோம்’ என்று கடந்த 13.8.2016 அன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்பு ஒப்புக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

    அதன்படி இன்றைக்கு அந்த அடுக்குமாடி கட்டிடம் இடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே இடிந்து விழுந்த 11 மாடிக்கட்டிடம், இப்போது இடித்த அடுக்கு மாடிக்கட்டிடம் எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடுகளை அரசு வழங்க முன்வரவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

    ஆகவே எனது பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளின் வாயிலாக இன்றைக்கு அடுக்குமாடிக் கட்டிடத்தை இடித்திருக்கும் அ.தி.மு.க. அரசு கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டாலும், மக்களின் பாதுகாப்புக்கருதி இந்தக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    அதே போல் இந்த கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், இதில் அ.தி.மு.க. அரசு மூடி மறைத்துள்ள அனைத்து முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த கட்டிடங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் அ.தி.மு.க. அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    Next Story
    ×