என் மலர்

  செய்திகள்

  பெங்களூர் டிரைவரின் கவன குறைவால் நேர்ந்த விபத்து: தொண்டர்களை சமாதானம் செய்த மு.க.ஸ்டாலின்
  X

  பெங்களூர் டிரைவரின் கவன குறைவால் நேர்ந்த விபத்து: தொண்டர்களை சமாதானம் செய்த மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிகொண்டாவில் பெங்களூர் டிரைவர் கவன குறைவால் விபத்து நடந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சமாதானம் செய்தார்.
  வேலூர்:

  கிருஷ்ணகிரியில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.

  வேலூர் வழியாக சென்ற அவருக்கு வேலூர் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரிக்கு சென்றார்.

  அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, நந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்ட கார்களில் சென்றனர்.

  மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பள்ளிகொண்டா டோல்கேட்டில் காத்திருந்தனர்.

  இரவு 8.40 மணிக்கு வேலூரை அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே ஸ்டாலின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோட்டின் ஓரத்தில் உள்ள ஓட்டலில் இருந்து ஒரு கார் திடீர் என்று ரோட்டுக்கு வந்துவிட்டது.

  இதை எதிர்பார்க்காத மு.க.ஸ்டாலின் சென்ற கார் டிரைவர், திடீர் என்று காரை நிறுத்த முயன்றார். அப்போதும் அந்த காரின் மீது மு.க.ஸ்டாலின் சென்ற கார் மோதி நின்றது.

  இதில் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. காரில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின் மற்றும் கார் டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர்தப்பினர். இதனால் ஸ்டாலின் காருக்கு பின்னால் சென்ற அனைத்து கார்களும் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டன.  இந்த சம்பவம் டோல்கேட் அருகே காத்திருந்த தி.மு.க. தொண்டர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் மு.க.ஸ்டாலின் கார் விபத்துக்குள்ளானதை பார்த்து ஆத்திரம் அடைந்தனர். சுங்கச்சாவடியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த 6 தானியங்கி தடுப்பு கட்டைகளை பிடுங்கி வீசினர். தேசிய நெடுஞ்சாலையில் தொண்டர்கள் திரண்டதால் சென்னை- பெங்களூர் செல்லும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன.

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பள்ளிகொண்டா போலீசார் விரைந்து வந்தனர்.

  விபத்துக்கு காரணமான கார் பெங்களூரை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மு.க.ஸ்டாலின் கார் வருவதை கவனிக்காமல் பெங்களூர் டிரைவர் காரை சாலைக்கு ஓட்டி வந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது.

  இதையடுத்து காந்தி எம்.எல்.ஏ. காரில் மு.க.ஸ்டாலின் ஏறினார். டோல்கேட்டில் ஆவேசமாக இருந்த தொண்டர்களை மு.க.ஸ்டாலின் சமாதானம் செய்தார். அவர் பேசியதாவது:-

  நாங்கள் வருவதை கவனிக்காமல் பெங்களூர் டிரைவர் காரை ஓட்டி வந்ததால் லேசான விபத்து நடந்து விட்டது. இதில் எனக்கு சிறிய காயம்கூட ஏற்படவில்லை. தொண்டர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றார்.

  இதனால் தி.மு.க.வினர் சமாதானம் அடைந்தனர். பின்னர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி புறப்பட்டு சென்றார். விபத்துக்கு காரணமான கார் அவர்களுக்கு பின்னால் பெங்களூருக்கு சென்றது.

  விபத்தில் சேதமடைந்த மு.க.ஸ்டாலின் கார் சென்னை கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை- பெங்களூர் வாகனங்கள் 30 நிமிடங்களுக்கு பின் புறப்பட்டு சென்றன.

  விபத்து மற்றும் டோல்கேட் சூறை குறித்து புகார் எதுவும் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×