search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் விடுமுறையால் ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி
    X

    தொடர் விடுமுறையால் ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி

    தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என தொடர்ந்து பண்டிகை விடுமுறையால் ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    சென்னை:

    பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகி விட்டது. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்த போதிலும் முறைப்படுத்த தேவையான வழிமுறைகளை வகுக்கப்படவில்லை. இதுவே கூடுதல் கட்டண வசூலுக்கு சாதகமாக உள்ளது.

    அரசு பஸ் மற்றும் ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்களை நாடுகிறார்கள். பொது மக்களின் தேவையை அறிந்து கொண்டு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட பல மடங்கு உயர்வாக டிக்கெட் வசூலிக்கிறார்கள்.

    தற்போது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ந்து திங்கட்கிழமை ஆயுத பூஜை, செவ்வாய்க்கிழமை விஜயதசமி, புதன்கிழமை மொகரம் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையாகும்.

    இதனால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். சிறப்பு ரெயில்கள் வழக்கமான ரெயில்களில் இடமில்லை. இதனால் கடைசி நேரத்தில் பயணமாக ஆம்னி பஸ்களை நாடும் போது பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவன வெப்சைட்டில் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு வழக்கமாக ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது மல்டி ஆக்சில் பஸ்களில் ரூ.1500 முதல் ரூ.2600 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    அதிக கட்டணம் வசூலிக்கும் விவரங்களை ஒவ்வொரு ஆம்னி பஸ் நிறுவனமும் வெப்சைட்டில் பகிரங்கமாக வெளியிட்டு வசூலிக்கிறது.

    இடம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஒரு சிலர் பல மடங்கு உயர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் பெறுகின்றனர்.

    சாதாரண, நடுத்தர மக்கள் ஆம்னி பஸ் பக்கம் செல்ல தயங்குகிறார்கள். அதிர்ச்சி அடையக் கூடிய வகையில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கும் கட்டணத்தை பொது மக்களுக்கு திருப்பி தரவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகியிடம் கேட்டதற்கு, எங்கள் சங்கத்தில் உள்ள யாரும் இது போன்று வசூலிப்பது இல்லை. எப்போதும் போல நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே வாங்குகிறோம்.

    ஒரு சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டு மொத்த ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் கெட்டப் பெயர் ஏற்படுகிறது. எங்களுடைய ஆம்னி பஸ்களில் எப்போதும் ஒரே விதமான கட்டணமே வசூலிக்கப்படும் என்றார்.

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்து துறை கமி‌ஷனர் சத்தியசாகு பிரதாகு, இணை கமி‌ஷனர் வீரபாண்டியன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று (7-ந்தேதி) முதல் 13-ந்தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவிர பரிசோதனை நடக்கிறது.

    சென்னையில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், இ.சி.ஆர். சுங்கசாவடி. ஸ்ரீபெரும்புதூர், சுங்கசாவடி, மதுரவாயல் சுங்கசாவடி, செங்குன்றம் சுங்கசாவடி, பரங்கிமலை, போரூர் சுங்கசாவடி ஆகிய இடங்களில் சிறப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றன.

    வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பொன்னுரங்கம், யுவராஜ், பழனிசாமி, ஸ்ரீதரன், என்.தினகரன், வெங்கடேஸ்வரன், எஸ்.கருப்புசாமி, ஆர்.பி. செந்தில் குமார், ஏ.ஏ.முத்து, நெல்லையப்பன், அசோக்குமார், பாஸ்கர், சவுந்திரராஜன், ஆர்.சுந்தர்ராஜன், அசோக் குமார், ரவிச்சந்திரன், ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களில் 5 மோட்டார் ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க கூடாது, அதிவேகம், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதை இக்குழு கண்காணிக்கும், பெர்மிட், தகுதி சான்று, வரி கட்டிய ரசீது போன்ற விவரங்களை வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

    அவசரகால கதவு, தீயணைப்பு கருவி போன்றவை இருக்க வேண்டும். டிரைவர் மது அருந்திவிட்டு ஓட்டுதல் ஆம்னி பஸ்களில் அதிக பாரம் ஏற்றி செல்லுதல் போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×