என் மலர்

  செய்திகள்

  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி 17, 18-ந் தேதிகளில் தொடர் ரெயில் மறியல் போராட்டம்
  X

  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி 17, 18-ந் தேதிகளில் தொடர் ரெயில் மறியல் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற 17 மற்றும் 18 -ந் தேதிகளில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் நடத்திய அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  சென்னை:

  காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.

  அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் நேற்று காலை 11.15 மணியளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அய்யாக் கண்ணு, டெல்டா மு.சேகரன், ராம கவுண்டர் உள்பட விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், விவசாய பிரிவு தலைவர் பவன்குமார், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, த.மா.கா. துணை தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபுபக்கர், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு, இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

  * காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

  * அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக்குழு விரைவில் ஜனாதிபதியை சந்தித்து முறையிடும்.

  * மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் 48 மணி நேரம் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

  * அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் என 10 லட்சம் பேர் ஒருங்கிணைந்து சென்னையில், ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்படும்.

  மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சிலர் பதிவு செய்த கருத்துக்கள் வருமாறு:-

  வி.பி.துரைசாமி:- தி.மு.க. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. காவிரி பிரச்சினையை பொறுத்தவரையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு ஆயுதமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் நிரந்தர தீர்வாக அமையும் என்பது தி.மு.க.வின் நிலைப்பாடு. எனவே வேற்றுமை பாராமல் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து உரிமையை காக்க வேண்டும்.

  டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், தஞ்சையில் 10 ஆண்டுகள் மருத்துவம் படித்திருக்கிறேன். காவிரி விவசாயிகளுடன் நன்கு பழகி இருக்கிறேன். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதுகுறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளோம். காவிரி விவகாரத்தில் உணர்ச்சிபூர்வ போராட்டமாக இல்லாமல் உணர்வுபூர்வ போராட்டமாக இருக்க வேண்டும்.

  தொல்.திருமாவளவன்:- உச்சநீதிமன்றம் தீர்ப்பையும் மீற முடியும் என்று கர்நாடகம் நமக்கு எடுத்துக்காட்டி உள்ளது. அரசியல் அழுத்தத்தால் மட்டுமே நாம் மத்திய அரசை வலியுறுத்த முடியும். எனவே அனைத்துக்கட்சிகள் சார்பில் சென்னையில் மாபெரும் பேரணியை நடத்த வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை உளவுத்துறையினர் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கவனத்துக்கு எடுத்து செல்வார்கள்.

  இதே போன்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

  ரெயில் மறியல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றிய போது அதில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில் 24 மணி நேரம் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. திரைப்பட இயக்குனர் கவுதமன், ‘2 நாட்கள் நடத்தினால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று வலியுறுத்தினர். அதன்பின்னர் 2 நாட்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது.

  பின்னர் 17, 18 ஆகிய தேதிகளில் ரெயில்மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய கோவை தங்கம், அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனை ஏற்று தேதியை முடிவு செய்ய வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த தொல்.திருமாவளவன், ‘தற்போது 17, 18 தேதியை வைத்துக்கொள்வோம். இந்த தேதியில் பங்கேற்க அரசியல் கட்சி பிரதிநிதிகளை விவசாயிகள் நேரில் சென்று கேட்டுக்கொள்ளட்டும். அவசியம் ஏற்பட்டால் தேதியை பின்னர் மாற்றிக்கொள்ளலாம்’ என்றார்.

  Next Story
  ×