என் மலர்

  செய்திகள்

  கணேஷ், சோலையம்மாள், பானுமதி
  X
  கணேஷ், சோலையம்மாள், பானுமதி

  அம்மா மீண்டு வருவார்! எங்கள் பிரார்த்தனை பலிக்கும்: அப்பல்லோ ஆஸ்பத்திரியில் திரண்ட தொண்டர்கள் உருக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா மீண்டு வருவார்! எங்கள் பிரார்த்தனை பலிக்கும் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் திரண்ட தொண்டர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இருந்தும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். ஞாயிற்றுக்கிழமை லண்டன் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  அப்பல்லோ ஆஸ்பத்திரியின் வெளியே வாசலில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கூடி ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

  தினமும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று வருகின்றனர்.

  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க.வினர் வந்த வண்ணம் உள்ளனர். ஆஸ்பத்திரி வாசலில் சோகத்துடன் கூடியிருந்த அ.தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த சோலையம்மாள் கூறியதாவது:-

  ‘நான் தேனாம்பேட்டை கீரியப்பா ரோட்டில் இருக்கிறேன். வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்துகிறேன். அம்மா என்றால் எங்களுக்கு உயிர். எங்கள் ரத்தமே அம்மா தான்.

  அம்மாவுக்கு என்ன நோய் என்றே தெரியவில்லை. வெளியில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசுகிறார்கள். தேவையில்லாத வதந்தியை கிளப்புகிறார்கள். நான் தினமும் எங்கள் வீட்டருகேயுள்ள செல்லியம்மன் கோவிலில் விளக்கேற்றி அம்மா நலமுடன் வரவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு வருகிறேன்.

  அம்மா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 22-ந் தேதியில் இருந்து தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கிறேன். அதிகாலையில் 4 மணியில் இருந்து வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு காலை 10 மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்து விடுவேன். நான் அம்மாவின் விசுவாசி என்பதால் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டு உரிமையாளரிடம் சொல்லி விட்டு வந்து விடுவேன்.

  அம்மாவை பார்க்க எங்களை உள்ளே விட மாட்டார்கள். அதனால் ஆஸ்பத்திரி வாசலில் மாலை வரை இருந்து விட்டு செல்வேன். தினமும் இங்கு வருவது எனக்கு மன ஆறுதலாக உள்ளது. அம்மா ஏழைகளுக்காக நிறைய உதவிகளை செய்துள்ளார்.

  நாங்களும் குடிசையில் தான் இருக்கிறோம். குழந்தைகள் படிக்க புத்தகங்கள் முதல் பசியாற சாப்பிடுவதற்கு அம்மா உணவகம் வரை நிறைய செய்து இருக்கிறார். அவர் பூரணமாக குணமடைந்து வரவேண்டும். அதற்காகத்தான் பிரார்த்திக்கிறோம். எங்கள் பிராத்தனை வீண் போகாது".

  பானுமதி ராஜா (எழும்பூர்):- முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மா குணமடைய தினமும் வேண்டி வருகிறோம். அம்மா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 22-ந்தேதியில் இருந்து தினமும் இங்கு வந்து செல்கிறோம். எங்கள் குடும்பமே அம்மாவுக்கு விசுவாசிதான். எல்லோருமே அம்மா படத்தை கையில் பச்சை குத்தியிருக்கிறோம்.

  அம்மா நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் வெளியில் பல்வேறு வதந்திகளை கிளப்புகிறார்கள். அதை கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அழுகை வருகிறது. லண்டன் டாக்டரும் சிகிச்சை அளித்து இருக்கிறார். இப்போது அம்மா உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் சொல்வது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது.

  புரட்சி தலைவி அம்மாவை பார்க்க உள்ளே சென்றுவரும் அமைச்சர்களிடம் நாங்கள் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வோம். ‘அம்மா நல்லா இருக்காங்க. பயப்பட வேண்டாம்’ என பதில் கூறிவிட்டு செல்கிறார்கள்.

  எந்த நோயாக இருந்தாலும் அதில் இருந்து மீண்டு அம்மா தைரியமாக வருவார். எங்கள் நம்பிக்கை வீண் போகாது.

  கணேஷ் (விருகம்பாக்கம்):- புரட்சி தலைவி அம்மா நோய் வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தற்போது உடல் நலம் தேறி வருவதாக கேள்விப்படுகிறோம். அம்மா சீக்கிரம் பூரண குணம் அடைவார். மன தைரியம் படைத்த அவர் நோயில் இருந்து மீண்டு வருவார். அவர் வந்தால் தான் கட்சிக்காரர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் பிறக்கும். அம்மாவின் உடல் நிலையை அறிந்து கொள்ளவே தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கிறேன்' என்றார்.

  ஜெயலலிதா உடல்நிலை பற்றி அறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு இன்று வந்திருந்தார். அவருடன் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சத்திரியன் வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

  ஆனால் ஆஸ்பத்திரிக்குள் வேல்முருகனை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.
  Next Story
  ×