search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கூட்டம்: ஐகோர்ட்டு தடை உத்தரவால் தேர்தல் ஆணையரின் பேட்டி பாதியில் ரத்து
    X

    அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கூட்டம்: ஐகோர்ட்டு தடை உத்தரவால் தேர்தல் ஆணையரின் பேட்டி பாதியில் ரத்து

    உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். மதியம் ஐகோர்ட்டு தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்ததால் ஆணையரின் பேட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் 17, 19-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இதுதொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று மதியம் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது.

    முன்னதாக காலையில் தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி தா.கார்த்திகேயன், தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநில தேர்தல் ஆணையர் வேண்டுகோள் விடுத்தார். அதே போன்று அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    உள்ளாட்சி தேர்தலுக்காக நடந்துவரும் ஆயத்தப்பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு பேட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன், உள்ளாட்சி தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எவ்வளவு, வாக்குப்பெட்டிகள் எவ்வளவு தேவை, பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை போன்ற தகவல்களை கூறினார்.

    அப்போது அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதாக தகவல் வந்தது. இதனால் அவர் தனது பேட்டியை அதோடு பாதியிலேயே முடித்துக்கொண்டார்.

    பத்திரிகையாளர்கள், ஐகோர்ட்டு தடை உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யுமா? என்று அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், ஐகோர்ட்டின் உத்தரவு குறித்த முழுமையான தகவல் கிடைத்த பின்னர் தான் எதுவும் கூறமுடியும் என்றார்.

    Next Story
    ×