search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல்நிலை முன்னேற்றம்: ஜெயலலிதாவுக்கு 13-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை
    X

    உடல்நிலை முன்னேற்றம்: ஜெயலலிதாவுக்கு 13-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு 13-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு போயஸ்கார்டன் வீட்டில் முதலில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    அன்றைய தினம் இரவு சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிவக்குமார் தலைமையிலான டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

    அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியின் சிறப்பு நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொள்ள கடந்த 30-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அங்கு ஜெயலலிதாவுக்கு இதுவரை மேற்கொண்ட சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் பார்வையிட்டார்.

    இதன் பிறகு சிகிச்சையில் சில மாற்றங்களை செய்யும் படி கூறினார். அவரது ஆலோசனையின் பேரில் மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கிருமித் தொற்றுக்கான சிகிச்சையும், நோய் எதிர்ப்பு மருந்துகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே ஞாயிற்றுக்கிழமை லண்டன் புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் நேற்றிரவு அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    முதல்- அமைச்சரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள் சுவாச உதவி மற்றும் தொடர்புடைய அனைத்து மருத்துவ உதவிகளும் கிருமி தொற்று சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது.

    முதல்-அமைச்சருக்கு வழங்கப்படும் முழுமையான சிகிச்சைக்கு அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். டாக்டர்களும் ஒருங்கிணைந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 13-வது நாளாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளதால் அவரது உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றும் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    அமைச்சர்கள் தலைமை கழக மூத்த நிர்வாகிகள் மட்டும் ஆஸ்பத்திரிக்குள் சென்று வந்தனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே கூடி நின்றனர்.
    Next Story
    ×