search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் ரூ.55 லட்சத்தில் அகழாய்வுப் பணி மழைக்காலம் முடிந்ததும் தொடங்குகிறது
    X

    ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் ரூ.55 லட்சத்தில் அகழாய்வுப் பணி மழைக்காலம் முடிந்ததும் தொடங்குகிறது

    ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் ரூ.55 லட்சத்தில் அகழாய்வு பணி மழைக்காலம் முடிந்ததும் தொடங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 39 இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அதில் 36 இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கை நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமம் கி.மு. 2-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ரோமானியர்களுக்கு முக்கிய துறைமுகமாக விளங்கி உள்ளது. எனவே அழகன்குளத்தில் விரிவான அகழாய்வு பணிகள் ரூ.55 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

    அழகன்குளத்தில் அகழாய்வு குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த கிராமத்தில் ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வில் கல் மணிகள், சங்கு வளையல்கள், வெள்ளி முத்திரை நாணயம், மண்பாண்டங்கள், வெளிநாட்டு மண் ஜாடிகளின் துண்டுகள், பாசி மணிகள், இரும்பு பொருட்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள் அடங்கிய பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. இந்த அகழாய்வின் மூலம் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும் அறிவியல் சிறப்புகளையும் அறிய முடிகிறது.

    தொல்லியல் நெறிமுறைப்படி அழகன்குளத்தில் மேலும் விரிவான அகழாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்கப்பணிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்ததும் அழகன்குளத்தில் விரிவான அகழாய்வு நடத்தப்படும். தொல்லியல்துறை ஆணையர் ஜெகன்நாதன் உத்தரவுப்படி, துணை இயக்குனர் சிவானந்தம் ஏற்பாட்டில் 10 தொல்லியல் துறை ஊழியர்கள் உள்பட பலர் இந்த அகழாய்வு பணியை தொடங்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×