search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல்: பணப்பட்டு வாடா செய்வதை தடுக்க நாளை முதல் தீவிர வாகன சோதனை
    X

    உள்ளாட்சி தேர்தல்: பணப்பட்டு வாடா செய்வதை தடுக்க நாளை முதல் தீவிர வாகன சோதனை

    தமிழகத்தில் நாளை முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும், பணப்பட்டுவாடா செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எந்தவித புகார்களும் இல்லாமல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றுள்ளது. கட்சி அடிப்படை இல்லாமல் நடைபெறும் சிற்றூராட்சி, கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டுகளை அச்சீட்டு வழங்குகிறது. அதன்படி 6 கோடி வாக்குச்சீட்டுகள் அடிக்கப்பட்டு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

    போலியாக வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு விட்டதாக புகார்கள் எழுந்துவிட கூடாது என்பதற்காக வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பேப்பர்களை மத்திய தொகுப்பில் இருந்து தேர்தல் ஆணையமே வழங்கி உள்ளது. இதன் மூலம் வேறுபாடுகளை உணர்ந்துகொள்ளலாம். வாக்குச்சீட்டுகள் அச்சரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

    தமிழகத்தில் 17 ஆயிரத்து 495 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமாகிறது. எனவே 3 கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ‘வீடியோ கவரேஜ்’ மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க ரூ.3 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரம் பணம் வழங்கப்பட்டு விட்டது.

    நகர் பகுதிகளில் லேப்-டாப் மூலம் வெப் காமிராவில் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். நுண் பார்வையாளர்களாக மத்திய அரசு நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று அவர்களுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் வழக்கமான வாக்குச்சாவடிகளுக்கான பாதுகாப்பை விட பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் அளவிலான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதை தமிழக டி.ஜி.பி. அறிவிப்பார்.

    சின்னங்கள் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கட்சி அடிப்படை இல்லாத தேர்தல், கட்சி அடிப்படையிலான தேர்தலுக்கு தலா 30 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வேட்புமனுவை பார்த்தவுடன் நெருக்கடி இல்லாமல் சின்னங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக 20 சின்னங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இன்று(நேற்று) இரவோ, நாளையோ (இன்று) அந்த சின்னங்கள் வெளியிடப்படும்.

    வாக்குப்பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து ஜம்போ சைஸ் வாக்குப்பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒடிசா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன. இதில் முதற்கட்ட சோதனை முடிந்துவிட்டது, 2-வது கட்ட சோதனை நடைபெற வேண்டும். வாக்குச்சீட்டுகள், எந்திரங்கள் எல்லாம் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும்.

    வேட்புமனு பரிசீலனை, திரும்ப பெறுதல் முடிந்தவுடன் நாளை மறுதினம் முதல்(நாளை) வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். பணப்பட்டுவாடா செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனை பெற வேண்டும். உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்ய வேண்டும். மதுவிற்பனையை கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி பதவிகளை சிலர் ஏலம் விடுவதாக செய்திகள் வந்தன. இதுகுறித்து கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ஜனநாயக முறையில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாக நடைபெற வேண்டும். எனவே பணப்பட்டுவாடா, பதவிகளை ஏலம் விடுதல் போன்ற தவறுகள் செய்பவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கவும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×