search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் கள்ளக்காதலியால் தீ வைத்து எரிக்கப்பட்ட மேஸ்திரி பலி
    X

    திருவண்ணாமலையில் கள்ளக்காதலியால் தீ வைத்து எரிக்கப்பட்ட மேஸ்திரி பலி

    திருவண்ணாமலையில் கள்ளக்காதலியால் தீ வைத்து எரிக்கப்பட்ட மேஸ்திரி பலியானார். திருவண்ணாமலை டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள அய்யப்பன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், துரிஞ்சாபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வசந்திக்கும் (40) கள்ளத்தொடர்பு இருந்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தி தனது கணவர், 4 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலன் வெங்கடேசனுடன் சென்று விட்டார். திருவண்ணாமலை அய்யங்குளத்தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளக்காதல் ஜோடி தங்கினர்.

    வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்களிடம் இருவரும் கணவன்-மனைவி என்று கூறி வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். இரவில் 2 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

    நள்ளிரவில் வெங்கடேசன் மீது வசந்தி மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார். உடல் முழுவதும் தீ வேகமாக பரவியது. வெங்கடேசன் அலறி துடித்தார். இதையடுத்து வசந்தி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    அக்கம், பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வசந்தியை கைது செய்தனர்.

    விசாரணையில், தனது வாழ்க்கையை சீரழித்ததால் கள்ளக்காதலனை எரித்து கொல்ல முயன்றதாக வசந்தி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, வசந்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைந்தனர்.

    இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார். அவரது உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை.

    திருவண்ணாமலை டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×