search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேசின் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கூவத்தில் லாரி பாய்ந்தது: ஒருவர் சாவு- மேலும் சிலர் மூழ்கினார்களா?
    X

    பேசின் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கூவத்தில் லாரி பாய்ந்தது: ஒருவர் சாவு- மேலும் சிலர் மூழ்கினார்களா?

    பேசின் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கூவத்தில் லாரி பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பூர்:

    பொன்னேரியில் இருந்து வியாசர்பாடி நோக்கி இன்று அதிகாலை 2 மணியளவில் டிப்பர் லாரி சென்றது.

    பேசின் பிரிட்ஜ் மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் மேம்பால தடுப்பு சுவரை உடைத்து கொண்டு சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே செல்லும் கூவம் கால்வாய்க்குள் தலைகுப்புற விழுந்தது.

    இதில் தண்ணீரில் லாரி மூழ்கியது. அதில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பேசின் பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கால்வாய் ஓரத்தில் ராட்சத கிரேன் செல்ல வழியில்லாதால் லாரியை மீட்பதில் தாமதம் ஆனது. ராட்சத கிரேனை பாலத்தில் நிறுத்தி கால்வாயில் மூழ்கிய லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேற்றில் சிக்கி இருந்ததால் லாரியை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து அதில் சிக்கி இருந்த வாலிபர் உடலை மீட்டனர்.அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். லாரியில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் சிலர் கால்வாய்க்குள் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

    பேசின் பிரிட்ஜ் பாலத்தில் மீட்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. இதையடுத்து பாலத்தில் சென்ட்ரல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. புளியந்தோப்பு வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    விபத்துக்குள்ளான லாரி நேற்று நள்ளிரவு வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் புதிய பாலத்தின்அருகே டீசல் இல்லாமல் நின்று இருக்கிறது. அதில் இருந்த வாலிபர் ஒருவர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் வாங்கி சென்றதை ஊழியர்கள் பார்த்து உள்ளனர்.

    அதன் பின்னரே லாரி பாலத்தில் இருந்து கூவம் ஆற்றுக்குள் கவிழ்ந்து இருக்கிறது.

    இதற்கிடையே லாரியின் உரிமையாளர் பொன்னேரியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு உள்ளதால் லாரியில் வந்தவர்கள் எத்தனை பேர்? என்ற விபரம் தெரியவில்லை. விபத்தில் சிக்கிய லாரி மெட்ரோ ரெயில் பணிக்கு வந்ததாக தெரிகிறது.

    Next Story
    ×