search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: நாராயணசாமி தகவல்
    X

    நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: நாராயணசாமி தகவல்

    நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி புதுவை மாநில முதல்- அமைச்சராக உள்ளார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிட வசதியாக புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    இடைத்தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    தேர்தல் கமி‌ஷன் எந்த நேரத்திலும் இடைத்தேர்தலை அறிவிக்கலாம். ஜான்குமார் எனக்காக தனது தொகுதியை விட்டுத் தந்துள்ளார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். புதுவையின் வளர்ச்சிக்காகவும், நெல்லித்தோப்பு மக்கள் நலனுக்காகவும் தொகுதியை விட்டு கொடுத்துள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவேன்.

    கட்சி தலைவருக்கும், எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. எங்களிடையே சிலர் பிரிவை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். எங்களுக்குள் நாங்கள் விட்டுக்கொடுத்து கொள்வோம்.

    எதிர்கட்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இடைத்தேர்தலில் அமைதியான முறையில் ஓட்டு கேட்க வேண்டும். வெற்றிக்கு வியூகம் அமைக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினை வருமாறு அழைத்துள்ளேன். அவரும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தனவேலு, தீப்பாய்ந்தான், கீதா ஆனந்தன், அனந்தராமன், விஜயவேணி, பாலன், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், நாஜிம், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×