search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.6 கோடி ரெயில் கொள்ளையில் துப்பு துலக்க முடியமால் சி.பி.சி.ஐ.டி போலீசார் திணறல்
    X

    ரூ.6 கோடி ரெயில் கொள்ளையில் துப்பு துலக்க முடியமால் சி.பி.சி.ஐ.டி போலீசார் திணறல்

    6 கோடி ரெயில் கொள்ளையில் துப்பு துலக்க முடியமால் சி.பி.சி.ஐ.டி போலீசார் திணறி வருகின்றனர்.

    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற் கூரையை உடைத்து ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 8-ந்தேதி இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

    சீல் வைக்கப்பட்ட தனி பெட்டியில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட இந்த பணத்தை கொள்ளையர்கள் சவால் விட்டு கைவரிசை காட்டியது போல திருடிச் சென்று விட்டனர்.

    இக்கொள்ளை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் இருந்து சென்னை வரையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக போலீசார் துப்பு துலக்கினர். ஆனால் ரூ.6 கோடி கொள்ளையில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. ரெயில் கொள்ளை நடந்து நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது.

    ரெயில்வே ஐ.ஜி.மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் படையே ஒட்டு மொத்தமாக களம் இறங்கி, கொள்ளை வழக்கு விசாரணையை நடத்தினர். ஆனால் உருப்படியான எந்தவித தகவல்களையும் அவர்களால் திரட்ட முடியவில்லை. ரெயில்வே பார்சல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரே, கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்திருக் கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் யாரேனும் கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

    இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அணு அளவு கூட கொள்ளை வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதனால் ரெயில் கொள்ளை வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே காட்சி அளிக்கிறது. இதனால் கொள்ளை வழக்கில் இனி துப்புதுலங்குமா? துப்பு துலங்காத கொள்ளை வழக்குகளின் பட்டியலுடன் சேருமா? என்கிற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் ரெயில்வே துறையில் இதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் துப்பு துலங்காமலேயே உள்ளது. அந்த வழக்குகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

    அதுபோன்று நிலுவையில் இருக்கும் வழக்குகளின் பழைய வரலாறு வருமாறு:-

    கடந்த 2014-ம் ஆண்டு, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மே மாதம் 1-ந்தேதி குலைநடுங்க வைத்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் சுவாதி என்கிற கம்யூட்டர் என்ஜினீயர் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர். ரெயில்வே போலீசிடமிருந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பதை வெளி மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த குற்றவாளிகள் இதுவரை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு வழக்கு விசாரணை எதுவுமே தொடங்கப்படாமலேயே உள்ளது. இதுபற்றி அதிகாரப் பூர்வ அறிவிப்புகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை வெளியிட வில்லை.

    இதேபோல, சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலை கடத்திச் சென்ற வாலிபர் ஒருவர் எதிரில் வந்த சரக்கு ரெயிலுடன் மோதினார். கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி இச்சம்பவம் நடந்தது. இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் நிலுவையில் உள்ளது. ஆனால் 7 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் துப்பு துலங்காமலேயே உள்ளது.

    ரெயிலை கடத்திய ஆசாமி யார்? என்பதில் நீடிக்கும் மர்மம் இனி விலகுமா என்பதும் சந்தேகமே.

    இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரெயிலில் சூட்கேசில் வாலிபர் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாலிபர் யார்? என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப் படவே இல்லை. அவரை கொலை செய்தது யார்? என்பதும் தெரியவில்லை.

    இந்த 3 வழக்குகளின் வரிசையில் ரூ.6 கோடி கொள்ளை வழக்கும் இடம் பெற்று விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எப்போதுமே ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றுவது என்பது ஏன்? என்கிற கேள்வி எல்லோரது மனதிலுமே எழும். மாநில போலீசாரே அப்பிரிவில் இருந்தாலும், அவர்களுக்கு சட்டம்-ஒழுங்கு தொடர்பான எந்தவித வேலைகளும் இருக்காது. எந்த வழக்கை கையில் எடுக்கிறார்களோ? அதுபற்றிய விசாரணையில் முழு ஈடுபாட்டுடன் அவர்களால் செயல்பட முடியும். இதனால் சம்பந்தப்பட்ட வழக்குகளில் விரைவாக துப்பு துலங்கும். ஆனால் சமீபகாலமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வழக்குகள் தேங்கும் நிலையே காணப்படுகிறது.

    Next Story
    ×