search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவுக்கு 6வது நாளாக பஸ்கள் நிறுத்தம்: லாரிகள் ஓடாததால் ரூ.1400 கோடி இழப்பு - எல்லையில் சரக்குகள் தேக்கம்
    X

    கர்நாடகாவுக்கு 6வது நாளாக பஸ்கள் நிறுத்தம்: லாரிகள் ஓடாததால் ரூ.1400 கோடி இழப்பு - எல்லையில் சரக்குகள் தேக்கம்

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் 6வது நாளாக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் ஓடாததால் ரூ.1400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடைகள் வணிக வளாகங்கள் , அரசு அலுவலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன, இனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
    சேலம்:

    தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற உடனடியாக 60 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வந்தது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கர்நாடக அணைகளில் இருந்து 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கடந்த 5-ந் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு 6-ந் தேதி 15 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டது.

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடக விவசாய சங்கங்களும், கன்னடை அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவில் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால் மாநிலத்தில் வாகனங்கள் ஏதும் ஓடவில்லை,கடைகள் வணிக வளாகங்கள் , அரசு அலுவலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன, இனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    கர்நாடகாவில் தொடரும் இந்த போராட்டங்களால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்கள் செல்லும் சரக்கு லாரிகள் போக்குவரத்திலும் கடந்த 6 நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடந்த சில நாட்களாக ஆந்திரா வழியாக இயங்கி வந்த லாரிகளும் இன்று அங்கு நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரி போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.

    இதனால் ஓசூரில் சாலையோரம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு குறைந்த அளவிலான லாரிகள் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இது வரை ரூ.1400 கோடிக்கும் அதிகமான பொருட்கள் மாநிலம் முழுவதும் தேங்கி கிடக்கின்றன. அந்த தொழில்களில ஈடுபடுபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், கர்நாடகாவில் நடைபெறும் தொடர் போராட்டங்களால் கர்நாடக மாநிலத்திற்கும், அந்த மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கும் இயக்கப்படும் 40 ஆயிரம் லாரிகளில் 20 சதவீத லாரிகள் மட்டுமே இயங்குகிறது. இதனால் 1400 கோடிக்கும் அதிகமான பொருட்கள் தேங்கி உள்ளது.

    தமிழகத்தில் எந்த போராட்டங்கள் நடைபெற்றாலும் லாரிகள் டிரைவர்கள் தாக்கப்படுவதில்லை. ஆனால் கார்நாடகாவில் நேற்று பல லாரிகள் கல் வீசி உடைக்கப்பட்டுள்ளன. டிரைவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். லாரிகளை பாதுகாப்பாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.லாரிகளில் பொருட்களை ஏற்றவே லாரி உரிமையாளர்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    கர்நாடகாவில் நடைபெறும் தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் 500க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்களும் கடந்த 6 நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் தினமும் ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக அரசு பஸ்கள் மட்டும் வழக்கம் போல இயங்கி வருகிறது.

    இதனால் பயணிகள் அந்த பஸ்களில் முண்டியடித்தும், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்தும் செல்லும் நிலை இன்று வரை நீடிக்கிறது.

    சேலத்தில் இருந்து செல்லும் 50-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் கர்நாடகாவுக்கு செல்லாமல் ஓசூரில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் பல லட்சம் இழப்பு ஏற்பட்டு வருவதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×