search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்
    X

    ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்

    ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம், செப். 7-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    மழலை வகுப்பு முதல் 5-ம் வகுப்பு, 6 முதல் பிளஸ் 2 வரை என இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்தப் போட்டியை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ‘தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று“ என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப ஒரு துறையை தேர்ந்தெடுக்கும் போது அத்துறையில் சாதித்து புகழ் பெற வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட வேண்டும். செயலை செய்வது முக்கியமல்ல அச்செயலில் மனதை ஒரு நிலைப்படுத்தி செய்திடல் வேண்டும்.

    மனதை ஒரு நிலைப்படுத்தி விளையாடும் போது சிறப்பானதொரு இடத்தை அடைய முடியும். இங்கு கேரம் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கால்பந்து மற்றும் கிரிக்கெட்டிற்காக உலக தரத்தில் மைதானங்கள் அமைக்கப்படும். மக்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் செய்து முடிக்கப்படும்.

    அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிபதக்கம் பெற்றுத் தந்த சிந்துவையும், வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக்கையும், இறுதி போட்டியில் பங்கு பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கணை தீபாகர்மாவையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்த்து நீங்கள் அவர்களைப் போல உயர்ந்த இடத்திற்கு சென்று சாதிக்க துடிப்போடு விளையாட வேண்டும்.

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நல்ல முறையில் படித்து உயர்ந்த இடத்திற்கு சென்று நமக்கெல்லாம் வழி காட்டியாக திகழ்கின்றார். அவரைப் போன்று நீங்கள் அனைவரும் சிறப்பான உயர்ந்த இடத்திற்கு செல்ல முனைப்புடன் செயல்பட்டு சிறப்புடன் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் கில்பர்ட் பெஞ்சமின், தமிழ்நாடு தென்மண்டல கேரம் செயலாளர் கார்த்திகேயன், ராமநாதபுரம் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, செயலாளர் சிவக்குமார், ராமநாதபுரம் நீச்சல் பயிற்றுநர் ராஜேஸ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×