search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை

    தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பணம், நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி டவுன் சி.எல்.ரோட்டில் உள்ள ஜே.கே. அண்டு கோ என்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய ஷோ ரூம்மின் உரிமையாளர் கரன்சிங் (வயது 47). இவருக்கு, வாணியம்பாடி ஆசிரியர் நகர் மற்றும் செட்டியப்பனூரில் 2 வீடுகள் சொந்தமாக உள்ளது.

    கரன்சிங் தனது குடும்பத்துடன் செட்டியப்பனூரில் உள்ள வீட்டில் வசிக்கிறார். இதனால் ஆசிரியர் நகரில் உள்ள வீடு எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். இந்த வீட்டின் வளாகத்தை கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள பெண் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    அவர், தினமும் காலையில் வீட்டை சுத்தப்படுத்தி செல்வார். வழக்கம் போல் இன்று காலை அந்த பெண் பணியாளர் வீட்டு வளாகத்தை சுத்தம் செய்வதற்காக வந்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் கரன்சிங்கிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீட்டிற்கு அவர் விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு சிதறி கிடந்தன. பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்த, ரூ.30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து கரன்சிங், வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டனர்.கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×