search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
    X

    திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

    திருப்பூரில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி வார்டுகளான 34, 39, 40, 41, 42, 44, 45 ஆகிய 7 வார்டுகளில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த 7 வார்டுகளிலும் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த 1½ மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி தனியார் நிறுவனத்திடம் அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் மாநகராட்சியில் இருந்து பணம் வரவில்லை என்று தெரிவித்ததாக தெரிகிறது.

    இதைதொடர்ந்து இன்று காலை 7 வார்டுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

    பின்னர் திருப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள சுகாதார துறை அலுவலகம் முன்பு அவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சம்பள தொகையை வழங்கக் கோரி கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    Next Story
    ×