search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தம்: சி.ஐ.டி.யூ. அறிவிப்பு
    X

    துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தம்: சி.ஐ.டி.யூ. அறிவிப்பு

    துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சி.ஐ.டி.யூ. அறிவித்து உள்ளது.
    திருவாரூர்:

    துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சி.ஐ.டி.யூ. அறிவித்து உள்ளது.

    திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை காவலர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சங்க மாநில செயலாளர் கணேசன் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

    தமிழகம் முழுவதும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். பணி நிரந்தரம் செய்யப்படாமல், பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை முழு நேர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. அமைப்பு சார்பில் சென்னை தொழில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைவரையும் முழுநேர ஊழியர்களாக்கி உரிய சம்பளம் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி தமிழக அரசு உரிய அரசாணை வெளியிட வேண்டும்.

    அதேபோல் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் நியமிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரில் இந்த கோரிக்கைகள் தொடர்பான உரிய அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடாவிட்டால் வருகிற செப்டம்பர் மாதம் 2–ந் தேதி தமிழகம் முழுவதும் பணியாற்றும் நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×