என் மலர்
செய்திகள்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: கையில் கத்தியுடன் தலைகீழாக நின்று ஆசிரியர் நூதன போராட்டம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, வேட்டவலம் ரோடு ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (40). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.
தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தின் எதிரே உள்ள மரத்தில் வேட்டியின் ஒரு பகுதியையும், இடுப்பில் மறுபகுதியையும் கட்டினார். பின்னர் திடீரென தலைகீழாக நின்றார்.
அப்போது தான் பையில் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து கழுத்தின் அருகே வைத்திருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைகீழாக நின்று கத்தியை கழுத்தின் அருகே வைத்திருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
புதிய கல்விக்கொள்கை, கல்வியில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தலைகீழாக நின்று கத்தியை கழுத்தின் அருகே வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் கொளஞ்சியப்பன் கையில் மனு ஒன்று வைத்திருந்தார். அந்த மனுவில், இந்திய கல்வியில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, மீண்டும் குலக்கல்வியை கொண்டு வரக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
தாலுகா அலுவலகத்தில் தலைகீழாக நின்று, கத்தி வைத்திருந்தது தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசில் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொளஞ்சியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.