search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா வாரச்சந்தையில் தங்கம் - வெள்ளி நகைகளும் கிடைக்கும்: சென்னையில் இந்த மாதம் திறக்க ஏற்பாடு
    X

    அம்மா வாரச்சந்தையில் தங்கம் - வெள்ளி நகைகளும் கிடைக்கும்: சென்னையில் இந்த மாதம் திறக்க ஏற்பாடு

    சென்னையில் அம்மா வாரச்சந்தை இந்த மாதம் திறக்கப்பட உள்ளது. அம்மா வாரச்சந்தையில் தங்கம்-வெள்ளி நகைகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
    சென்னை :

    வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் தரமாகவும் விலை மலிவாகவும் வாங்குவதற்கு வசதியாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா வாரச்சந்தை திறக் கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

    அதன்படி, சென்னையில் அம்மா வாரச்சந்தை திறப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. நீண்ட பரிசீலனைக்கு பிறகு ஓ.எம்.ஆர்.சாலை, பூந்தமல்லி சாலை, அரும்பாக்கம், மிண்ட் பாலம் அருகே, விருகம்பாக்கம் பிரதான சாலை, அசோக் பில்லர் உதயம் தியேட்டர் பின்புறம் உள்பட 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    8 இடங்களில் சுழற்சி முறையில் தினமும் ஒரு இடத்தில் அம்மா வாரச்சந்தையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெகு விரைவில் அம்மா வாரச்சந்தை திறக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அம்மா வாரச்சந்தையில் வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகம், கதர் கிராம தொழில்கள் வாரியம், மகளிர் மேம்பாட்டு ஆணையம், புது வாழ்வு இயக்ககம், இந்திய/ஓமியோ மருத்துவ இயக்ககம், தமிழ்நாடு வண்ண மீன் விற்பனையாளர்கள் நலச்சங்கம், காதி கிராம தொழில் வாரியம், கைத்தறி துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, சிறைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம், வனத்துறை, உப்பு நிறுவனம், ஆவின், கூட்டுறவு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சர்க்கரைத்துறை, சிறுபான்மை நலத்துறை ஆகிய 25 துறைகளின் தயாரிப்பு பொருட்கள் கிடைக்கும்.

    வேளாண்மை துறை சார்பில் அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம் உள்பட உணவு தானிய பொருட்களும், எண்ணெய் வகைகளும், தோட்டக் கலை-மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறி-பழ வகைகள், கீரை, கிழங்கு வகைகள், மலர் வகைகளும், இந்திய/ ஓமியோ மருத்துவ இயக்ககம் சார்பில் ஓமியோ, சித்தா, யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகளும், கைத்தறி துறை சார்பில் பட்டு, பருத்தி, பாலிஸ்டர், காதி, புடவை, வேஷ்டி, சுடிதார், துண்டு, ரெடிமேட் ஆடைகளும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் காலணிகள், கைப்பை, அழகு சாதனங்கள் மற்றும் அழகு நிலைய பொருட்களும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஊசி, பாசி மணிகள், மூலிகைகள், மரவல்லி பொருட்கள், சிறுதானிய பொருட்கள், கூடை வகைகளும், சிறைத்துறை சார்பில் பேக்கரி பன், பிஸ்கட், பிரட், அல்வா, பால்கோவா போன்ற திண்பண்டங்களும் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மீன்வளத்துறை சார்பில் வண்ண மீன்கள், கடல்-உள்நாட்டு மீன்கள், கடல்- உள்நாட்டு எறால், கருவாடு வகைகள் மற்றும் சமைக்கப்பட்ட உணவு வகைகளும், கால்நடை துறை சார்பில் நாட்டுகோழி, பிராய்லர் கோழி, காடை, வான்கோழி, வாத்து, புறா மற்றும் அவைகளின் முட்டைகள், வெண்பன்றி, முயல், வளர்ப்பு பிராணிகளும், ஆவின் சார்பில் ஐஸ்கீரிம், பால்கோவா, பால் பவுடர், வெண்ணெய், நெய், சுவையூடப்பட்ட பால், லஸ்சி, பாதாம் பவுடர், தயிர் போன்ற பால் பொருட்களும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரிசி, கோதுமை, உளுந்து, சர்க்கரை, பருப்பு வகைகள், தானிய வகைகள், பாமாயில், குடிமை பொருட்களும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தங்கம், வெள்ளி நகைகள், கவரிங் நகைகள், செயற்கை ஆபரணங்கள் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.

    அரசு துறைகள் தவிர, வங்கித்துறை, தனியார் துறைகளும் அம்மா வாரச்சந்தையில் வர்த்தகம் செய்ய உள்ளது. வாட் வரி செலுத்தும் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

    இல்லை என்றால், எந்த துறையின் தொழில் நுட்பம், மானியம் மற்றும் உதவி பெற்று உற்பத்தி செய்யப்படுகிறதோ, அந்த துறையின் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதியை மாநகராட்சியே செய்யும். எந்த கடைக்கோ அல்லது இதர வசதிகளுக்கோ எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா வாரச்சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், விலை மலிவானதாகவும் மக்கள் பயன் பெற தக்க வகையில் இருக்க வேண்டும் என்று அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசாணை வழங்கி உள்ளார்.

    அதன்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து, அம்மா வாரச்சந்தை திறப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்டு (இந்த மாதம்) 25-ந் தேதிக்குள் அம்மா வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
    Next Story
    ×