search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தினத்தன்று மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    சுதந்திர தினத்தன்று மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    மழலை வாயில் மது ஊற்றப்படும் கொடுமை நடந்துள்ளது. எனவே சுதந்திர தினமான 15-ந் தேதி முதல் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை :

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பால் மனம் மாறாத மழலையின் வாயில் அதன் தந்தையே பீர் ஊற்றும் கொடூரக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அரக்க மனம் படைத்த இளைஞர்கள் சிலர் 4 வயது குழந்தைக்கு மது புகட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியே விலகாத நிலையில், தந்தையே குழந்தைக்கு பீர் கொடுப்பதை மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    பெரியவர்கள் மது குடிப்பதே தவறு என்று பிரசாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 மாதக் குழந்தைக்கு, குற்ற உணர்வே இல்லாமல், அதன் தந்தையே மது புகட்டுவதும், அதை அக்குழந்தையின் தாயாரே வீடியோ எடுத்து வெளியிடுவதும் நினைத்துப் பார்க்க முடியாத சீரழிவுகள் ஆகும். இத்தகைய செயல்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

    தமிழ்நாடு என்ற பெயரை குடிகார நாடு என மாற்றி விடலாம் என்று கூறும் அளவுக்கு இந்தியா முழுவதும் தமிழகத்தைப் பற்றி அவப்பெயர் உருவாகியிருக்கிறது. இது தான் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் சாதனையாகும்.

    தமிழகத்தில் இதுவரை 4 வயது குழந்தை மது அருந்துவது தான் வேதனையான சாதனையாக இருந்தது. இப்போது அதை விஞ்சும் வகையில் 10 மாதக் குழந்தைக்கு மது புகட்டப்பட்ட கொடுமை நடந்திருக்கிறது.

    தமிழகத்தில் குழந்தைகளும், மாணவ, மாணவிகளும் உரிய வயதுக்கு முன்பே மது குடிக்கும் அவலம் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டு, தடையின்றி மது கிடைப்பது தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

    தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்த ஜெயலலிதா, அதற்காக மேற்கொண்ட முதல் கட்ட நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. 500 மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன.

    மது விற்பனை 2 மணி நேரம் குறைக்கப்பட்டு விட்டது என்றாலும் கூட அதனால் மது நுகர்வு எந்த வகையிலும் குறையவில்லை. படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தை வெள்ளைக் கொடி காட்டி தடுப்பதற்கு சமமானவை ஆகும். இதனால் எந்த விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.

    தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் மதுவின் தீமைகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இதை உணர்ந்து வரும் ஆகஸ்டு 15-ந் தேதி விடுதலை நாள் முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு மது புகட்டிய தந்தையை கண்டுபிடித்து கைது செய்து மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×