search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு இன்று சிறப்பு முகாம்: அனைத்து பரிசோதனைகளும் இலவசம்
    X

    அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு இன்று சிறப்பு முகாம்: அனைத்து பரிசோதனைகளும் இலவசம்

    மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
    சென்னை :

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி தாய்க்கும் அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு மாதமும் 9-ந்தேதி அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது.

    இந்த திட்டப்படி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு அனைத்து சுகாதார இயக்குனரகத்திற்கும் கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் 9-ந்தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    மேலும் 9-ந்தேதி நடக்கும் அந்த முகாமில் ரத்த பரிசோதனை, ரத்தகொதிப்பு, நீரிழிவு, இரட்டைக்குழந்தை, நஞ்சுக்கொடி கீழ் இருத்தல், ரத்தசோகை, இருதய நோய் உள்ளிட்ட அனைத்து வகை நோய்களையும் கண்டறிந்து அதற்கேற்றபடி அவர்களுக்கு வண்ண அட்டை வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்து கொடுக்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஒவ்வொரு மாதமும் 9-ந்தேதி சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

    பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு மறுநாள் (10-ந்தேதி) எத்தனை கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. எத்தனை பெண்கள் மிகவும் கவனிக்கவேண்டிய கர்ப்பிணிகள் என்ற புள்ளிவிவரத்தை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய சுகாதார இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    பரிசோதனை குறித்து சென்னை கஸ்தூரிபா மகளிர் மகப்பேறு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:-

    எங்கள் மருத்துவமனையில் ஏற்கனவே இலவசமாக தான் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 9-ந்தேதி சிறப்பு முகாம் கர்ப்பிணி பெண்களுக்காக நடத்தப்பட்டது.

    அந்த முகாமில் 120 கர்ப்பிணி பெண்கள் வந்தனர். அவர்களில் 66 பேர் மிகவும் கவனிக்க வேண்டியவர்கள் என்று தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு 15 வகையான மகளிர் பேறுகால சவால்கள் இருந்தன. அவர்களுக்கு தனித்தனியாக அட்டை வழங்கப்பட்டன. அந்த அட்டையை பார்த்த உடன் அவர்களுக்கு தனி சிகிச்சைகள் அளிக்கப்படும். அவர்கள் பேறுகாலத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்காது.

    இவ்வாறு டாக்டர் விஜயா தெரிவித்தார்.

    இதன்படி 9-ந்தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்தப்படுகிறது. அந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் அடையலாம்.
    Next Story
    ×