search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி: 17-ம் தேதி ஆஜராகும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
    X

    ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி: 17-ம் தேதி ஆஜராகும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

    சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராகும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர் சிகிச்சைக்குப் பின்னர் வாக்குமூலம் அளித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ராம்குமாரை ஏற்கெனவே போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொலை சம்பவம் தொடர்பாக நடித்துக் காட்ட வைத்து வீடியோ எடுத்தனர். இதேபோல் பிலால் மற்றும் சுவாதியின் தோழிகள் 5 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முடிவு செய்த காவல்துறை, இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி அளித்த எழும்பூர் நீதிமன்றம், வரும் 17-ம் தேதி ராம்குமாரை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. 17-ம் தேதி ராம்குமார் நீதிபதி முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×