search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை: சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
    X

    கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை: சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

    பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “கொண்டவன் கோபியானால், கண்டவனுக்கும் இளக்காரம்” என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதுபோலத்தான் தமிழர்களின் நிலை இன்று இருக்கிறது. தமிழர்களுக்குத் தாய் நாட்டில் பிழைக்க வழியில்லை என்று வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும், அங்கேயும் அடித்து நசுக்கப்படுகின்ற கொடுமை தான் நிலவிவருகிறது.

    உதாரணமாக 2 நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருந்து திருப்பதிக்குச் சென்ற 32 தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன், தமிழகச் சட்டப்பேரவையில் தி.மு.க. சார்பில் எ.வ.வேலு, கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொடுத்த போதிலும், அதற்கு முதல்-அமைச்சர் தான் பதில் கூற வேண்டும் என்று தெரிவித்து, அது விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. வியாழக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், சனிக்கிழமை சப்தகிரி ரெயிலில் இவர்களைக் கைது செய்ததாக ரேணிகுண்டா காவல் துறையினர் தவறானத் தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.

    ஆந்திரப் போலீசார் இவ்வாறு தமிழர்களைக் கைது செய்வது என்பது முதல் முறையல்ல. பொதுவாக தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள சித்தூர், புத்தூர், நகரி, ரேணிகுண்டா ஆகிய பகுதிகளிலே, பஸ்களிலும், ரெயில்களிலும் பயணம் செய்யும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரால் அழைத்துச் சென்று உண்மைக்கு மாறான வழக்குகளைத் தொடுத்து, பிரச்சினை வளையத்திற்குள் சிக்க வைத்து, சித்ரவதைக்கு ஆளாக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    சேஷாசலம் வனப் பகுதியிலே 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பிறகு, இது தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்து சிறையிலே அடைத்து, அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போதிலும் சுமார் 2 ஆண்டுகள் சிறையிலே வாடினர். இறுதியில் திருப்பதி நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என்று தெரிவித்து விடுதலை செய்தது. இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பதிக்குப் பயணம் செய்த 32 தமிழர்களைப் பின் தொடர்ந்து சென்ற ரேணிகுண்டா காவல் துறையினர் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் என்ற இடத்திலே கைது செய்திருக்கிறார்கள்.

    ஆந்திர மாநிலக் காவல்துறை அதிகாரிகள் இவர்களைச் செய்தியாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்கள் எல்லாம் செம்மரம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னையில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பயணம் செய்த அவர்களைக் கைது செய்திருப்பதாகவும், அவர்களில் 29 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தையும், 2 பேர் வேலூர் மாவட்டத்தையும், ஒருவர் சென்னையையும் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்ததோடு, அவர்களிடம் இருந்து கோடரிகள், கத்திகள், கடப்பாரைகள் போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் உண்மைக்கு மாறாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

    திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களில் 12 பேர் கண்ணமங்கலத்தை அடுத்த மேல்செண்பகத் தோப்பு மற்றும் கீழ் செண்பகத் தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    கைதான ராஜேந்திரன் என்பவரின் மனைவி மேனகா செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது கணவர் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் செல்வதாகக் கூறி, கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டனர். மறுநாள் காலை தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனது கணவரையும், உறவினர்களையும் ஆந்திரப் போலீசார் வேண்டுமென்றே செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி கைது செய்திருப்பது தெரிந்தது. ஆந்திரப் போலீசார் பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவர்கள் செம்மரம் வெட்டச் செல்லவில்லை. ஆந்திரப் போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்குப் போடுகிறார்கள். கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

    இவரைப் போலவே, சங்கர் என்பவரின் மனைவி அமுதா, கார்த்திகேயன் என்பவரின் மனைவி பட்டம்மாள் ஆகியோரும் பிழைக்கச் சென்ற தங்கள் கணவர்கள் கைது செய்யப்பட்ட நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். 3 குழந்தைகளுக்குத் தாயான சுந்தரி என்பவர் தன்னுடைய தந்தை அப்பாசாமியும், கணவர் அன்பழகனும் கைது செய்யப்பட்டது பற்றியும், அவருடைய கணவர் கடந்த ஆண்டு உடல் நலம் இல்லாமல் இருந்தபோது நேர்ந்து கொண்ட பிரார்த்தனையைச் செலுத்துவதற்காகக் கோவிலுக்குச் சென்றவர்களை இவ்வாறு மரம் வெட்ட வந்தவர்கள் என்று கூறி கைது செய்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

    பழங்குடியினர் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.சுப்பாராவும் ஆந்திர மாநிலக் காவல் துறையினரின் மனிதாபிமானமில்லாத செயலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    இந்தச் சம்பவம் குறித்து, ஆந்திர மாநில முதல்-மந்திரிக்கு, தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகவும் இன்று செய்தியில் வெளிவந்த போதிலும், கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே நல்லுறவு நின்று நிலைத்திட வேண்டும் என்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்ற முறையில் உடனடியாக இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆவன செய்ய வேண்டும் என்றும்; ஆந்திர மாநிலக் காவல் துறையினரும் எதிர்காலத்தில் இவ்வாறு தமிழர்களைக் குறிவைத்துத் கைது செய்யும் போக்கினைக் கைவிட வேண்டும் என்றும்; மிகுந்த நட்புணர்வோடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அப்பாவித் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிட முன்வருவார் என்று பெரிதும் நம்புகின்றேன்.

    இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
    Next Story
    ×