search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 32 ஏரி மற்றும் குளங்களும் தூர்வாரி புனரமைக்கப்படும்: எஸ்.பி.வேலுமணி
    X

    சென்னையில் 32 ஏரி மற்றும் குளங்களும் தூர்வாரி புனரமைக்கப்படும்: எஸ்.பி.வேலுமணி

    சென்னையில் 32 ஏரி மற்றும் குளங்களும் தூர்வாரி புனரமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

    சென்னையை ஒட்டியுள்ள 15 ஏரிகள், குளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை தூர்வாரி புனரமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக சென்னையிலுள்ள 17 திருக்கோவில் குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் மழைநீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    இவை தவிர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 32 ஏரி மற்றும் குளங்களும் தூர்வாரி புனரமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 2016-17ம் நிதியாண்டில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் பயன்பெறும் இலக்கு மக்கள், பண்ணை சாரா தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிலை மேம்படுத்துவதற்கும், நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 8 ஆயிரம் நபர்களுக்கு 8 கோடி ரூபாய் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட நிதியிலிருந்து கடன் உதவி வழங்கப்படும்.
    ஊரகப் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை அளிக்கவும், கிராமங்களில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும் அரசின் வீடு கட்டும் திட்டங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் செங்கற்களுக்கான செலவைக் குறைக்கவும், 5 சாம்பல் கற்கள் உற்பத்தி செய்யும் அலகுகளும், 4 நிலைப்படுத்தப்பட்ட மண் கற்கள் உற்பத்தி செய்யும் அலகுகளும், ஒரு கோடியே 78 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

    தமிழகத்தை பசுமை மயமாக்கும் முயற்சியாக, பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, ஊரகப் பகுதிகளில், மாபெரும் மரம் நடவுத் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள், நாற்றங்கால்கள் மற்றும் சாலையோரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு உயிர் உரங்கள் வழங்கவும்; உபரியாக உற்பத்தி செய்யப்படும் உயிர் உரத்தினை விற்பனை செய்வதன் மூலம் கிராம ஊராட்சிகள் வருவாயை உயர்த்தவும், 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், அலகு ஒன்றுக்கு 90 ஆயிரம் ரூபாய் வீதம், 3 கோடியே 46 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 385 மண்புழு உர அலகுகள் அமைக்கப்படும்.

    காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இரவு நேரங்களில் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பயனடையும் வகையில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சூரிய மின்சக்தி விளக்குகள் வழங்கப்படும். இதனால் 3 ஆயிரத்து 500 மீனவர்கள் பயனடைவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆற்றிய பதிலுரை வருமாறு:

    நெம்மேலியில் தற்போதுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில், ஆயிரத்து 371 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூடுதலாக, நாளன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க விரைவில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட உள்ளது.

    ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் பேரூரில் நாளன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் முன்னுரிமைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த திட்ட அறிக்கைக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளது.

    தாம்பரம், பல்லாவரம், பம்மல் மற்றுமுள்ள நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கும், பிரதான குழாய் பதித்தல் முதலான குடிநீர்த் திட்டப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இம்மாதம் முடியும்.
    சென்னை மாநகரில் அம்மா உணவகம் 300 இடங்களிலும், தமிழகத்தின் இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 247 இடங்களிலும், என மொத்தம், 547 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    அம்மா உணவகங்களின் மூலம், 31.7.16 வரை, 32 கோடியே 14 லட்சம் இட்லிகளும், 12 கோடியே 60 லட்சம் கலவை சாதங்களும், 15 கோடியே 44 லட்சம் சப்பாத்திகளும், மலிவான விலையில் பெற்று, ஏழை எளிய மக்கள், பசியாறி உள்ளனர்.
    சென்னை மாநகராட்சியில் 107 இடங்களிலும், 4 அரசு மருத்துவமனைகளிலும் ஆக 111 இடங்களில் புதிதாக அம்மா உணவகங்கள் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.

    கடந்த 5 ஆண்டு காலத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 212 பாலங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 162 பாலப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 பாலப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு, மின்விசிறிகளுக்கு மாற்றாக, மின்காந்த அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் 5 லட்சத்து 35 ஆயிரம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×