search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் இன்று வக்கீல்கள் நூதன போராட்டம்
    X

    தஞ்சையில் இன்று வக்கீல்கள் நூதன போராட்டம்

    தஞ்சையில் இன்று வக்கீல்கள் அம்பேத்கர் படத்தை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    வக்கீல்கள் சட்ட திருத்த எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கடந்த 44 நாட்களாக கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதம், மனித சங்கலி, உருவ பொம்மை எரிப்பு, சட்ட திருத்த நகல் எரிப்பு போன்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த மாதம் 25-ந் தேதி சென்னையில் ஐகோர்ட்டை முற்றுகையிட்டு வக்கீல்கள் 10 மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நாளை(சனிக்கிழமை) மதுரையில் நடக்கிறது.

    இதற்கு இடையில் இன்று தஞ்சை வக்கீல்கள் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்க கட்டிட வாசலில் அம்பேத்கர் படத்தை வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

    அதாவது அம்பேத்கார் படத்தின் முன்பு சட்ட புத்தகங்கள், வக்கீல்கள் அணியும் கோட் மற்றும் உடைகளை வைத்து தேங்காய் உடைத்து சூடம், ஊதுபத்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    அப்போது வக்கீல் நல்லதுரை தலைமையில் அனைத்து வக்கீல்களும் சேர்ந்து கோ‌ஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் நல்லதுரை நிருபர்களிடம் கூறியதாவது-

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி 2 மாதம் ஆகிறது. எங்கள் பிரச்சினை தீர்க்க வேண்டிய மாநில அரசு சட்ட சபையில் வக்கீல்கள் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி மறைமுகமாக ஐகோர்ட்டுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. வக்கீல்கள் இல்லாமல் கோர்ட்டை நடத்த ஐகோர்ட்டு திட்டமிட்டுள்ளது.

    அதனால் இந்த நூதன போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். இதற்கு மேலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் எங்கள் கோட் மற்றும் உடைகளை பார் கவுன்சிலிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.

    எனவே எங்களது கோரிக்கைகள் நிறைவேற பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று மாலை தஞ்சை ரெயிலடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×