என் மலர்

  செய்திகள்

  ஆபத்தான சகுனம்!- தலையங்கம்
  X

  ஆபத்தான சகுனம்!- தலையங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் வழக்குகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற நாட்டின் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் சிக்கி கொள்வது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து.
  சென்னை:

  ஆடி வரும் அழகு தேருக்கு அச்சாணியும், தேர்சக்கரமும்தான் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது தேரின் அலங்காரம் புதிது புதிதாய் மாறும். ஆனால் அச்சாணியும், சக்கரமும் பலமாக இருந்தால்தான் தேர் அசைந்தாடி வரும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

  சக்கரம் பழுது பட்டால் தேர் எவ்வளவு அழகாக இருந்து என்ன பயன்? அதே போல்தான் ஒரு நாட்டின் ஆட்சித்தேருக்கு மூல காரணமாக இருந்து சிறப்பாக செலுத்துவது நிர்வாகத் திறன் கொண்ட அதிகாரிகள்தான்.

  இந்த அதிகாரிகள் சரியில்லை என்றால் சக்கரம் பழுதுபட்டால் தேருக்கு என்ன கதியோ அதே கதிதான் நாட்டுக்கும்!

  ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறும். ஆனால் அதிகாரிகளின் செம்மையான நிர்வாக திறன்தான் நாட்டை தொடர்ந்து வழி நடத்திக் கொண்டிருக்கும்.

  500 ரூபாய் லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அதிகாரி சிக்கி கொள்வதும், 5 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் அரசியல் வாதிகள் சிக்கி கொள்வதும் நாட்டுக்கு ஆபத்து என்று சொல்வதை விட அசிங்கம் என்பதுதான் சரியாக இருக்கும்.

  ஆனால் ஊழல் வழக்குகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற நாட்டின் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் சிக்கி கொள்வது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து.

  இவர்கள் செய்வது இந்திய ஆட்சிப் பணி. ஓசையின்றி இவர்கள் செய்யும் ஆட்சிதான் ‘ஓகோ’ என்று நாட்டை மிக உயர்ந்த நிலைக்கும் அழைத்து செல்லும். ‘அய்யகோ’ என்று படுபாதாளத்திலும் தள்ளிவிடும்.

  மிக முக்கியத்துவமான, மிக உயர்ந்த இந்த பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் பல நடைமுறைகள் உள்ளன. மிகத்திறமையானவர்கள் மட்டுமே வெற்றி பெற்று இந்த பதவிகளுக்கு வர முடியும்.

  முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று வடிகட்டித்தான் திறமையானவர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்கிறார்கள்.

  தேர்வு பெற்று வருபவர்கள் அனைவருமே திறமைசாலிகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

  ஆண்டு தோறும் சராசரியாக 10 லட்சம் பேர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார்கள். 2025 மதிப்பெண்களுக்கு 8 பாடப் பிரிவுகளில் தேர்வை சந்திக்கும் அவர்களில் எட்டு, பத்தாயிரம் பேர்தான் வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் இருந்தும் காலியிடங்களுக்கு ஏற்ப சில நூறு பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். மிக முக்கியமான பதவி என்பதால் மிக கடினமான தேர்வுகள் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. மெளரியர் ஆட்சிகாலமாகட்டும், மொஹலாயர் ஆட்சி காலமாகட்டும், அந்த காலங்களிலும் கடுமையான நடைமுறைகள் மூலமே உயர் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அடுத்து வந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் தேர்வு முறை கடினமாகவே வரையறுக்கப்பட்டிருந்தது.

  எந்த குற்றச்சாட்டுக்கும் இடமில்லாத கடுமையான நடைமுறைகளை பின்பற்றி அதிகாரத்துக்கு வரும் இந்த மாதிரி அதிகாரிகளில் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கி வருவது அதிர்ச்சியளிக்கிறது.

  குஜராத்தில் அரசு சொத்தை குறைந்த விலைக்கு மனைவிக்கு பட்டா போட்டு கொடுத்த கலெக்டர்... மருத்துவ கவுன்சில் முறைகேட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிக்கியதும் அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றியதும் மிகவும் வேதனையானது.

  ஊழலில் ஈடுபடும் ஒருசில அதிகாரிகள் மட்டும் சிக்குகிறார்கள். பலர் தப்பி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

  நல்லாட்சிக்கு திறமையான, நேர்மையான அதிகாரிகள் வேண்டும். ஆனால் வரவர இந்த உயர் அதிகாரிகளிடமும் நேர்மை மழுங்கி வருகிறது. ஊழல் மேலோங்கி வருகிறது என்று வரும் தகவல்கள் மிகப்பெரிய எச்சரிக்கை மணி. நாட்டுக்கு ஆபத்தான சகுனம். இந்த அதிகாரிகள் திறமையானவர்களாக மட்டும் இருந்தால் போதாது. நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும். கடைநிலை ஊழியர்கள் செய்யும் தவறுகளால் சிறு பாதிப்புகள்தான் ஏற்படும். ஆனால் ஐ.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த தேசமும் பாதிக்கப்படும். இவ்வளவு கடுமையான நடைமுறைகளை தாண்டி திறமையானவர்களாக தேர்வு செய்யப்படுபவர்களும் அரசியல்வாதிகளைப் போல் ஊழலில் சிக்குவது எப்படி?

  அவர்களிடம் திறமை இருக்கிறது. ஆனால் நேர்மை அதைவிட குறைவாக இருக்கிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது “திறமையாக செயல்பட வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

  அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்காமல் இருக்க நேர்மை, துணிவு, திறமைதான் முக்கியம்.

  உயர் அதிகாரிகளை தேர்வு செய்யும் போதே அவரிடம் நேர்மை இருக்கிறதா? பணி வழங்கினால் நேர்மையாக இருப்பாரா? என்பதை பற்றியும் அறிய ஒரு அளவு கோல் அவசியம் தேவை. அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் வருவார்கள்... போவார்கள்... ஆனால் நீங்கள் நிரந்தரமானவர்கள். உங்களது திறமையும், நேர்மையும்தான் நமது தேசத்தை வழி நடத்தும். எனவே நேர்மையும், திறமையும் இரண்டு தராசு தட்டுகள் போன்றது. இதில் எதற்கும் பங்கம் வந்து விடக் கூடாது. அதற்கு இடம் கொடுக்கவும் கூடாது. ‘உங்களைத்தான் நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி’ என்பதை உணர வேண்டியது அவசியம்!
  Next Story
  ×