search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட்டில் முற்றுகை போராட்டத்தில் மோதல்: தடையை மீறிய 5 வக்கீல்கள் கைது
    X

    ஐகோர்ட்டில் முற்றுகை போராட்டத்தில் மோதல்: தடையை மீறிய 5 வக்கீல்கள் கைது

    ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தில் மோதலில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 வக்கீல்களை தேடிப் பிடித்து கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் வக்கீல்கள் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது.

    கோர்ட்டில் வாதம் செய்யும் போது, நீதிபதியிடம் குரலை உயர்த்தி பேசக் கூடாது. நீதிபதிகளின் பெயரைச் சொல்லி மனுதாரர்களிடம் பணம் வசூலில் ஈடுபடக்கூடாது என்பது உள்ளிட்ட 45 அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

    இதற்கு தமிழகம் முழுவதும் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 1-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 105 வக்கீல்கள் மீது அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.

    இதனை கண்டித்தும் வக்கீல்கள் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக ஐகோர்ட்டில் உள்ள அனைத்து வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நீதிபதிகள் செல்லும் நுழைவு வாயில் அருகிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. ஐகோர்ட்டு வடக்கு வாசலிலும் வக்கீல்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஐகோர்ட்டில் நுழைந்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அனைத்து வாயில்களிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    வடக்கு வாசல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தள்ளிக் கொண்டு வக்கீல்கள் ஐகோர்ட்டினுள் நுழைய முயன்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    வக்கீல்கள் போராட்டத்தை போலீசார் வீடியோவிலும் பதிவு செய்தனர். இதனை போட்டு பார்த்து மோதலில் ஈடுபட்ட வக்கீல்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதன்படி வீடியோ காட்சிகள் மூலமாக 5 வக்கீல்கள் அடையாளம் காணப்பட்டனர்.

    அதன் மூலம் சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் கருணாகரன் வக்கீல்கள் அசோக்குமார், ஓம்பிரகாஷ், கிஷோர், யாசர் அராபத் ஆகிய 5 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

    கருணாகரன் பழைய வண்ணாரப்பேட்டையிலும், அசோக்குமார் தண்டையார் பேட்டையிலும் வசித்து வந்தனர். மற்ற 3 வக்கீல்களின் வீடும் ராயபுரத்தில் உள்ளது. இவர்கள் அனைவரையும் போலீசார் நேற்று இரவு வீடுகளில் வைத்து கைது செய்தனர்.

    சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைதான 5 வக்கீல்களும், சைதாப்பேட்டையில் உள்ள ஜார்ஜ் டவுண் கோர்ட்டு நீதிபதி வடிவேலின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 5 வக்கீல்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசாரின் வீடியோ பதிவில் 25 வக்கீல்கள் மோதல் மற்றும் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த வீடியோ காட்சிகளை வைத்துதான் மோதலில் ஈடுபட்ட வக்கீல்களை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள். இதன் பேரில் தான் 5 வக்கீல்கள் சிக்கினர். வீடியோவில் உள்ள மேலும் 20 வக்கீல்களை தேடிப் பிடித்து கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    25 வக்கீல்களின் பெயர் விவரம்:-

    1. கினி இம்மானுவேல்
    2. கருணாகரன்
    3. விஜயகுமார்
    4. பாரதி
    5. மில்டன்
    6. சேகர்
    7. கோபால்
    8. மார்சல் ரவீந்திரன்
    9. சீனிவாச பிரபு
    10. பார்த்தசாரதி
    11. சாலமோன்
    12. வேல்முருகன்
    13. நாதன்
    14. அசோக்குமார்
    15. யாசர் அராபத்
    16. கிஷோர்
    17. அன்பரசன்
    18. ராகவன்
    19. ஜெயமோகன்
    20. தன்ராஜ்
    21. ஆட்டுத்தொட்டி நாகராஜ்
    22. ஓம்பிரகாஷ்
    23. சரவணன்
    24. கண்ணபிரான்
    25. சங்கர்

    வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் அளித்த புகாரின் பேரில் 25 வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வீடியோவை போட்டு பார்த்து அதில் இடம் பெற்றிருக்கும் வக்கீல்களை கைது செய்ய போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக வக்கீல்கள் மத்தியில் கூடுதல் பரபரப்பு நிலவுகிறது.

    ஐகோர்ட்டில் நேற்று நடந்த முற்றுகை போராட்டம் இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் இன்று வக்கீல்கள் யாரும் போராட்டம் நடத்த வரவில்லை. இருப்பினும் நேற்று போடப்பட்டிருந்தது போல 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வக்கீல்கள் போராட்டத்தால் நேற்று முடங்கி இருந்த பஸ் போக்குவரத்து இன்று சீரானது. பாரிமுனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டன. அப்பகுதியில் இயல்பு நிலை காணப்பட்டது.
    Next Story
    ×