search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே கார் மோதி கார்பெண்டர் பலி: போலீசார் விசாரணை
    X

    தர்மபுரி அருகே கார் மோதி கார்பெண்டர் பலி: போலீசார் விசாரணை

    தர்மபுரி அருகே கார் மோதியதில் கார்பெண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கோடியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 45). கார்பெண்டர்.

    இவர் நேற்று மாலையில், நல்லாம்பட்டி பகுதியில் வேலையை முடித்து விட்டு  மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். பர்வதன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே  அவர் சென்றபோது, எதிரே வந்த கார் வேகமாக மோதியது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க பட்டார். இரவு சுமார் 8.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி கார்பெண்டர் ராஜகோபால் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த காரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ராஜகோபால் மீது மோதி விட்டு தப்பி சென்ற கார், சின்னபெரமனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மீதும் மோதியுள்ளது. அப்போது காரில் பழுது ஏற்பட்டதால் காரை மேலும் இயக்க முடியாத காரணத்தால் அந்த இடத்திலேயே காரை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சின்னபெரமனூர் பகுதிக்கு விரைந்து சென்று, அந்த காரை பறிமுதல் செய்து,  போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து, காரின் பதிவு எண் வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், பென்னாகரம் பகுதியில் இருந்து அந்த கார் புறப்பட்டு வந்துள்ளதும் வரும் வழியில் மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தை உரசி விட்டு நிற்காமல் சென்றதும், பொதுமக்கள் அந்த காரை துரத்தியபோது தான் ராஜகோபால் மீது மோதியதும் தெரிய வந்தது.

    பலியான ராஜகோபாலுக்கு  முருகம்மாள் என்ற மனைவியும், சிவபிரியா, சிவநந்தினி ஆகிய 2 மகள்களும், சிங்கார வேலு என்ற மகனும் உள்ளனர்.

    டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டினாரா? என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×