search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசு: ஜெயலலிதா பேச்சு
    X

    மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசு: ஜெயலலிதா பேச்சு

    மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசு தான் என்று வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி ஜெயலலிதா பேசினார்.
    சென்னை:

    வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் துவக்கி வைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் முதல் வழித் தடத்தை, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றியவர் வெங்கையா நாயுடு. எனவே தான், இந்த திட்ட துவக்க விழாவில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன்.

    கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை 29.6.2015 அன்று துவக்கி வைத்தேன்.

    அந்த துவக்க விழாவிற்கு தமிழக அரசின் சார்பில், வெங்கையா நாயுடுவை அழைத்திருந்தேன். ஆனால், அலுவல் காரணமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்தால் அப்போது அவரால் அந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அவரது மத்திய நகர்ப்புற மேம்பாடு துறை அதிகாரிகள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டின் உற்ற நண்பர் வெங்கையா நாயுடு ஆவார். தமிழக நலன்களை காப்பதிலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத் தருவதிலும் முன் நிற்பவர் வெங்கையா நாயுடு என்று சொன்னால் அது மிகையல்ல.

    மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த ஒரு சில மாதங்களிலேயே 5.9.2014 அன்று சென்னையில் வெங்கையா நாயுடு என்னை சந்தித்த போது பாரதப் பிரதமரிடம் தமிழக அரசின் சார்பில் நான் சமர்ப்பித்த கோரிக்கைகளில், வெங்கையா நாயுடுவின் துறை தொடர்பானவற்றை நான் விவாதித்தேன்.

    அப்போது, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கேட்டுக் கொண்டேன். அவரது ஆலோசனைப்படி தமிழக அரசின் அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளோடு இது தொடர்பாக விரிவாக விவாதித்தனர்.

    அதன் அடிப்படையில், வெங்கையா நாயுடு பொறுப்பு வகிக்கும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இதனை பரிந்துரைத்து, வெங்கையா நாயுடுவின் ஒப்புதலைப் பெற்றது. 13.12.2015 அன்று சென்னையில் என்னை சந்தித்து வெள்ள நிவாரணம் மற்றும் இதர திட்டங்கள் குறித்து அவர் விவாதித்த போது வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்திற்கு தன்னுடைய அமைச்சகம் ஒப்புதல் அளித்து மத்திய அரசின் நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்ததுடன் மத்திய அரசின் நிதித்துறையும் விரைந்து ஒப்புதல் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக உறுதியளித்தார்.

    வெங்கையா நாயுடுவின் முயற்சி மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒத்துழைப்பாலேயே இன்று இந்த திட்டம் துவக்கப்படுகிறது. எனவே தான், தற்போது நாடாளுமன்றம் நடைபெறுகின்ற சூழ்நிலையில் வெங்கையா நாயுடு பங்கேற்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாத சனிக்கிழமை அன்று, இந்த விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

    இந்த விழாவில், வெங்கையா நாயுடு கலந்து கொண்டதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003ஆம் ஆண்டு அப்போதைய எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் தான் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித்தடம் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித்தடம் என இரு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு எனது தலைமையிலான அப்போதைய அரசு வித்திட்டது.

    14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 2007ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் மாநில அரசும், 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்திற்காக, 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்போதைய தி.மு.க. ஆட்சியில் 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.

    2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கடந்த ஜுன் மாதம் வரை 11,596 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, திட்டப் பணிகள், குறித்த காலத்தில் முடிவுறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

    இத்திட்டத்திற்காக இதுவரை தமிழக அரசு 2,383 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், 1,854 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும், 82.51 கோடி ரூபாயை மானியமாகவும் வழங்கியுள்ளது.

    மத்திய அரசு 1,950 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், 365 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலம் 7,095 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

    2011ஆம் ஆண்டு வரையிலான அப்போதைய தி.மு.க ஆட்சியில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளில் 3 சதவீதமே முடிவடைந்திருந்தது. எனது தலைமையிலான அரசு 2011ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பின்னர் பணிகளை விரைந்து செயல்படுத்தியதன் காரணமாக உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்தவரை 98 சதவீதப் பணிகளும், நிலத்தடி வழித்தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்தவரையில் 65 சதவீதப் பணிகளும், பணிமனையை பொறுத்தவரையில் 100 சதவீதப் பணிகளும் தற்போது முடிவுற்றுள்ளன.

    கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை 29.6.2015 முதல் வழங்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட வழித்தடப் பகுதியான சின்னமலை முதல் விமான நிலையம் வரை அடுத்த மாதத்திலும், ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை வரும் அக்டோபர் மாதத்திலும், நிலத்தடி வழித்தடத்தில் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், பயணிகள் சேவை, துவக்கப்பட்டு விடும். மீதமுள்ள பகுதிகளில் அனைத்துப் பணிகளும் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.

    வடசென்னைப் பகுதியில் பெருகி வரும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, அப்பகுதி மக்களும் மெட்ரோ ரெயில் சேவையை பெற்றிடும் வகையில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பதற்கான கருத்துரு 2010ஆம் ஆண்டு, மத்திய அரசுக்கு அப்போதைய தி.மு.க அரசால் அனுப்பி வைக்கப்பட்டது.

    எனினும், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இதற்கான ஒப்புதலை வழங்கவே இல்லை. நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, எனது அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவும், வெங்கையா நாயுடுவின் ஒத்துழைப்பின் காரணமாகவும், தற்போது மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.

    இந்த வழித்தடத்தில், 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதில், சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மற்றும் டோல்கேட் மெட்ரோ நிலையங்கள் எனது சட்ட மன்றத் தொகுதியான ராதா கிருஷ்ணன் நகர் பகுதியில் அமைக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய தி.மு.க ஆட்சியின் போது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் பல ‌ஷரத்துகள் மாநில அரசின் நலன்களுக்கு எதிராக இருப்பதால் இவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நான் பாரதப் பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்.

    14.6.2016 அன்று பாரதப் பிரதமரிடம் நான் அளித்த கோரிக்கை மனுவில் இது பற்றி விரிவாகத் தெரிவித்துள்ளேன். மாநில அரசு பாதிக்காத வகையில் இந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை முதல், திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்டு அதன் மூலம் வடசென்னை மக்கள் பெரிதும் பயன் பெறுவர்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
    Next Story
    ×