search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்-3 மகள்களை கொன்ற சின்னராஜுக்கு விரைவில் தண்டனை: குறுகிய காலத்தில் வழக்கை முடிக்க போலீசார் முடிவு
    X

    தாய்-3 மகள்களை கொன்ற சின்னராஜுக்கு விரைவில் தண்டனை: குறுகிய காலத்தில் வழக்கை முடிக்க போலீசார் முடிவு

    தாய் மற்றும் 3 மகள்களை படுகொலை செய்த கொலையாளி சின்னராஜுக்கு விரைவில் தண்டனை பெற்றுதரவும் குறுகிய காலத்தில் வழக்கை முடிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் பாண்டியம்மாள் என்ற பெண்ணும் அவரது மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகியோரும் கொலையுண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    2-வது கணவர் போல இவர்களுடன் வசித்து வந்த சின்னராஜ் என்ற வாலிபர் கொடூரமான முறையில் இவர்களை கொலை செய்தது தெரிய வந்தது.

    மகள்களாக நினைக்க வேண்டிய 3 பெண்கள் மீதும் சின்னராஜ் ஆசைப்பட்டதே இக்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது.

    இதைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கை மனிதாபிமான அடிப்படையிலும் சட்டத்துக்கு உட்பட்டும் விரைந்து முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பவித்ரா, பரிமளா இருவரும் கல்லூரியில் படித்து வந்த நிலையில் சினேகா பள்ளிப் படிப்பை கூட முடிக்காமல் இருந்தார். இது போன்ற நிலையில் வாழ வேண்டிய வயதில் 3 பேரும் தாயுடன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கொடூர மனம் படைத்தவரால் மட்டுமே இது போன்ற கொலையை செய்ய முடியும் என்றும் அதுபோன்ற மன நிலையிலேயே சின்னராஜ் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    பாண்டியம்மாளையும் அவரது மகள்களையும் நன்றாக கவனித்து வந்த சின்னராஜ் செக்சில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்.

    குறிப்பாக மூத்த மகள் பவித்ராவை திருமணம் செய்து கொள்ளவும் சின்னராஜ் ஆசைப்பட்டுள்ளார். அதன் பின்னரே பாண்டியம்மாளுக்கும் சின்னராஜுக்கும் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    சின்னராஜால் தனது மகள்களுக்கு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பாண்டியம்மாள் அதன் பிறகு உஷாராக செயல்பட ஆரம்பித்தார். சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியில் படுக்க சொல்லியுள்ளார். ஆனால் சின்னராஜோ பாண்டியம்மாளை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்திலேயே இருந்தார். ஆனால் அது நிறைவேறவே இல்லை.

    கடந்த 4 ஆண்டுகளாக பாண்டியம்மாளையும் அவரது மகள்களையும் நன்றாக கவனித்து 3 மகள்களையும் படிக்க வைத்த சின்னராஜுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே ஈவுஇரக்க மற்ற கொலையாளியாக மாறியுள்ளார்.

    காமம் ஒருவரது கண்ணை எந்த அளவுக்கு மறைக்கும் என்பதற்கு சின்னராஜே பெரிய உதாரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கை பொறுத்த வரையில் சின்னராஜுக்கு விரைவில் தண்டனை வாங்கி கொடுக்க போலீசார் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன உத்தரவின் பேரில் இணை கமி‌ஷனர் மனோகரன், துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் ராயப்பேட்டை உதவி கமி‌ஷனர் வில்சன், இன்ஸ்பெக்டர் கோபாலகுரு ஆகியோர் வழக்கை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சின்னராஜ் அளித்த வாக்குமூலங்களை வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

    கொலை வழக்குக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் சின்னராஜிடம் இருந்து போலீசார் திரட்டியுள்ளனர். 4 பேரையும் கொன்று விட்டு கொலைப் பழியை வேறு ஒருவர் மீது போடுவதற்கு சின்னராஜ் முயற்சித்துள்ளார். அது தொடர்பான தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர்.

    கொலை நடந்த பின்னர் தினமும் வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு சென்றது, 4 பிணங்களோடும் தங்கி இருந்தது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து தகவல் தெரிவித்தது ஆகியவற்றையும் தகுந்த ஆதாரங்களுடன் போலீசார் திரட்டி வைத்துள்ளனர்.

    எனவே விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

    இந்த கொலை வழக்கில் சின்னராஜுக்கு எதிராகவே அனைத்து வி‌ஷயங்களும் நடந்துள்ளன. எனவே நிச்சயமாக இந்த வழக்கில் அவனுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுப்போம்.

    விசாரணை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னராஜை காவலில் எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஏனென்றால் வழககு விசாரணைக்கு தேவையான அனைத்தையும் அவரே வாக்குமூலமாக கூறி விட்டார். திறமையான போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொண்டு இந்த வழக்கை நடத்த உள்ளோம். இன்னும் 15 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவோம். அதன் பின்னர் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடித்து விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×