search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கரூர் பகுதியில் ரே‌ஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
    X

    கரூர் பகுதியில் ரே‌ஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

    கரூர் பகுதி ரே‌ஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் காகர்லா உஷா ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டம் ஆகிய பகுதிகளில் பொது இ-சேவை மையம் செயல்பாடு பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு நியாயவிலைக்கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதையும் முதுநிலை மாவட்ட கலெக்டர் காகர்லா உஷா, ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் ஊராட்சியில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொது இ-சேவை மையத்திற்கு முதுநிலை கலெக்டர் சென்று பார்வையிட்டதுடன் பொதுமக்களுக்கு தேவையான சான்றுகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்ததுடன் உடனுக்குடன் சான்றிதழை வழங்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், குளித்தலை வட்டம், வை.புதூர் நியாய விலை கடைக்குச்சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் தேவையான பொருட்களின் இருப்பு விபரம் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று அங்கு செயல்பட்டு வரும் பொது இ-சேவை மையத்தை பார்வையிட்டதுடன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சான்றுகளின் விபரம் குறித்து கேட்டறிந்ததுடன் பட்டா மாறுதல் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து பட்டா மாறுதல் ஆணை வழங்கிட வேண்டும்.

    பொது இ–சேவை மைய நோக்கம் எவ்வித அலைச்சலுமின்றி பொதுமக்கள் தேவையான சான்றுகளை உடனுக்குடன் பெறுவதே ஆகும். அந்த வகையில், பொது இ–சேவை மையத்தின் பயன்பாடு அமைந்திட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, அய்யர்மலை ஊராட்சியில் பாப்பன்குளம் பகுதிக்குச்சென்று பார்வையிட்டு பாப்பன்குளம் பகுதியைச்சுற்றி ஆக்கிர மிப்புகள் இல்லாதவாறு கண்காணித்து கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், திருச்சாபூர் நடுநிலைப் பள்ளிக்குச்சென்று மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு வழங்க உள்ள உணவுப்பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டதுடன் சுகாதாரமான முறையில் உணவுகளை வழங்கிட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, நங்கவரம் வடக்கு ஊராட்சி பகுதியில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவுக்கான பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டதுடன் மனுதாரர்களுக்கு தேவையான பட்டா உட்பிரிவு மற்றும் பெயர் மாற்றத்திற்கான ஆணைகளை உடனுக்குடன் வழங்கிட உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அருணா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், குளித்தலைவர் வட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×