search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வி அனுபவத்தை கொடுக்க வேண்டும் - தலையங்கம்
    X

    கல்வி அனுபவத்தை கொடுக்க வேண்டும் - தலையங்கம்

    நவீன யுகத்தில் பாடத்துக்கு அப்பாற்பட்டு துறை சார்ந்த பொது அறிவு, ஆராய்ச்சிகளில் பட்டதாரிகள் ஈடுபட வேண்டும்.
    சென்னை:

    ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்! கல்வித்துறை வளர்ச்சி அடையாத அந்தக் காலத்தில் சொல்லி வைத்த அனுபவ மொழி இன்று வரை உண்மை என்று நிரூபணமாகி வருகிறது.

    இன்றைய இளைஞர்கள் கல்வித் துறையில் சாதனை படைக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு என்ஜினீயர் அல்லது பட்டதாரிகள் உருவாகி வருகிறார்கள். ஆனால் அவர்களில் பலர் வேலை வாய்ப்பு பெறுவதில்லை. வேலையில்லா பட்டதாரிகளாகத்தான் சுற்றி கொண்டிருக்கிறார்கள்.

    காரணம், வேகமாக முன்னேறி வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர்களிடம் துறை சார்ந்த பொதுஅறிவு வளரவில்லை என்பதுதான் உண்மை.

    90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது. தட்டுத்தடுமாறி தேர்வானவர்கள் பெரிய வேலைகளில் நிறைய சம்பளத்தோடு பணிபுரிவதையும் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் புத்தக படிப்புக்கும் அப்பாற்பட்டு அவர்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொண்டதுதான்.

    மாநில அளவில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் வாங்கி சாதித்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், மதிப்பெண் குறைந்து விட்டால் அவன் படிக்க லாயக்கு இல்லாதவன் என்று பெற்றோரே முத்திரை குத்துவதும் வாடிக்கையானதுதான். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை உணர வேண்டும்.

    நமது பிளஸ்-2வை போல் பீகாரில் இன்டர்மீடியேட் வகுப்பு உள்ளது. அந்த தேர்வில் மாநில அளவில் டாப்-10 மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன.

    அங்குள்ள ஒரு ஊடக நிறுவனம் அவர்களின் தனித்திறமைகளை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது.

    அப்போது அரசியல் விஞ்ஞானம் (POLITICAL SCIENCE) என்றால் என்ன என்று அவர்களில் ஒரு மாணவியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அந்த மாணவி சமையற்கலையை பற்றிய பாடம் என்று பதிலளித்து இருக்கிறார்.

    இன்னொரு மாணவரிடம் தண்ணீரின் வேதிப்பொருள் (H2O) பற்றி கேட்டதற்கு பதில் தெரியவில்லை என்றார். இவர்கள்தான் மாநில அளவில் சாதித்தவர்கள்!

    இதை அறிந்ததும் அந்த மாநில கல்வித்துறை அதிர்ந்து போனது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையும் கிளம்பியது. ஏற்கனவே தேர்வு அறைகளில் காப்பி அடிப்பதற்காக பெற்றோர்களே ‘பிட்டை’ போடும் காட்சிகள் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது.

    சாதனை படைத்த 14 மாணவர்களின் திறமையை சோதிப்பதற்கு மீண்டும் ஒரு ‘டெஸ்ட்’ நடத்தித்தான் அவர்களுடைய தேர்ச்சி உறுதி செய்யப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது.

    நிறங்களை மையமாக வைத்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 11 பேர் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு பதில் கொடுத்தார்கள். 2 பேர் தேர்ச்சி பெறவில்லை. ஒரு மாணவி பயந்து தேர்வு எழுதவே செல்லவில்லை. அவர்களின் தேர்ச்சியை தேர்வுத்துறை ரத்து செய்தது.

    பொதுவாகவே புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் மனப்பாடம் செய்யும் நிலைகளில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடத்தில் சாதிக்கலாம். வாழ்க்கையில் சாதிக்க முடியாது.

    நவீன யுகத்தில் பாடத்துக்கு அப்பாற்பட்டு துறை சார்ந்த பொது அறிவு, ஆராய்ச்சிகளில் பட்டதாரிகள் ஈடுபட வேண்டும்.

    பள்ளிக்கூட வசதிகள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் குருகுலங்களில் கூட கல்விக்கும் அப்பாற்பட்டு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளனன.

    அதுதான் வாழ்க்கை பாடத்தில் ஜெயிக்க வைக்கும். எனவே கல்வி முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

    தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. அனைத்து மாநில அரசுகளின் கருத்தை கேட்டபிறகு அமுல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

    இந்த நேரத்தில் இந்த மாதிரி குறைபாடுகளை களையும் வகையில் மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதத்தில் கல்வி அமைய வேண்டும்.
    Next Story
    ×