search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னையில் வக்கீல்கள் பேரணி
    X

    வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னையில் வக்கீல்கள் பேரணி

    வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் வக்கீல்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர்.
    சென்னை:

    வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் சில திருத்தங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, நீதிபதிகள் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, குடிபோதையில் நீதிமன்றத்துக்கு வருவது, நீதிபதி முன்பு உரத்த குரலிலும், அவதூறாகவும் பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நீக்குவதற்கு ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்திருத்தம் வக்கீல்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்துக்கு வக்கீல்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். சட்டத்திருத்தத்தை ஐகோர்ட்டு திரும்ப பெறவேண்டும் என்று வக்கீல் சங்கங்கள் கோரிக்கை விடுத்தது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள், சென்னையில் கண்டன பேரணி நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக சென்னைக்கு நேற்று இரவு முதல் வெளியூர் வக்கீல்கள் வர தொடங்கினார்கள். இன்று காலையில் அவர்கள், திருவல்லிக்கேணி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலம் அருகில் குவியத் தொடங்கினர். சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் வக்கீல்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    இன்று காலை 10 மணி அளவில் வெளியிடங்களில் இருந்து ஏராளமான வக்கீல்கள் மற்றும் மாவட்ட வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் அணி அணியாக திரண்டனர். சென்னை ஐகோர்ட்டில் திரண்டிருந்த வக்கீல்களும் பால்கனகராஜ் தலைமையில் அங்கிருந்து புறப்பட்டு வந்தனர்.

    காலை 11.10 மணிக்கு திருவல்லிக்கேணியில் ஆயிரக்கணக்கான வக்கீல்கள் திரண்டனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து சேப்பாக்கம் நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணிக்கு பால்கனக ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் மற்றும் ஏராளமான பெண் வக்கீல்கள், மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஊர்வலமாக நடந்து வந்தனர்.

    சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் இந்தியன், மனுநீதிசோழன் போல வேடம் அணிந்திருந்தார். இன்னொரு வழக்கறிஞரான பூபதி அவரது பாதுகாவலர் போல வேடமிட்டிருந்தார். இருவரும் இரட்டை குதிரை சாரட் வண்டியில் அமர்ந்தவாறு வந்தனர்.

    வழக்கறிஞர் இந்தியன் அவரது கையில் ஏந்தி இருந்த சட்டையில் என் வழக்கறிஞர்களுக்கு சோதனையா? அய்யோ கேடு என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

    ஊர்வலமாக சென்ற அனைத்து வழக்கறிஞர்களும் புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக கோஷம் எழுப்பிய படியே சென்றனர்.

    சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் வழக்கறிஞர்களின் போராட்டத்திற்காக பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்புகளை மேடையில் பதிவு செய்தனர்.

    வக்கீல் பால்கனகராஜ் பேசுகையில், வழக்கறிஞர்களை முற்றிலுமாக பாதிக்கும் வகையிலும் அவர்களது உரிமையை பறிக்கும் வகையிலும் புதிய சட்டத்திருத்தம் உள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களை அழைத்து பேசி அவர்களுக்கு பாதகம் இல்லாத முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த போராட்டம் காரணமாக திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
    Next Story
    ×