search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 3½ கிலோ தங்ககட்டிகள் கடத்தல்
    X

    தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 3½ கிலோ தங்ககட்டிகள் கடத்தல்

    தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை மற்றும் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3½ கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர் :

    தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை மற்றும் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3½ கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக இறங்கி வந்த பயணிகளை சோதனை செய்தனர். ஆனால் எந்த பயணியிடமும் தங்கம் எதுவும் சிக்கவில்லை.

    இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு செல்ல வேண்டும். அந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்த ஒரு இருக்கையின் அடியில் மர்ம பை ஒன்று கிடந்தது.

    அதேபோல் விமானத்தின் கழிவறையிலும் ஒரு பை இருந்தது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு இருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், உடனடியாக விமானத்துக்குள் ஏறி அந்த மர்ம பைகளை சோதனை செய்தனர்.

    அதில் விமானத்தின்இருக்கைக்கு அடியில் இருந்த பையில் இருந்து அரை கிலோ எடை கொண்ட 5 தங்க கட்டிகளையும், கழிவறையில் கிடந்த பையில் இருந்து 100 கிராம் எடை கொண்ட 11 தங்க கட்டிகளையும் கைப்பற்றினார்கள். மொத்தம் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 600 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தாய்லாந்தில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்த மர்ம ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருப்பதை அறிந்ததும் தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அந்த தங்கத்தை விமானத்தின் இருக்கை மற்றும் கழிவறையில் விட்டுச்சென்றனரா? அல்லது தாய்லாந்தில் இருந்து வந்த அந்த விமானம் டெல்லிக்கு செல்லும் என்பதை அறிந்து, உள்நாட்டு பயணியாக டெல்லி செல்லும் போது எடுத்துச் செல்லலாம் என அதை விட்டுச்சென்றனரா? என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து சென்ற பயணி யார்? என்பதை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 
    Next Story
    ×