search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கொன்று கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கொன்று கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

    • ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள போல்கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி என்ற விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • முதியவரை வெட்டி கொன்று கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள போல்கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி(75). விவசாயி. இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6-ந்தேதி அதிகாலை கட்டிலில் உறங்கிய நிலையிலேயே மர்மநபர்கள் வெட்டி கொன்றுவிட்டு பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், கணேசன் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    கொலை செய்யப்பட்ட முத்துச்சாமி ேதாட்டத்திற்கு அருகில் வேலை பார்த்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மாயமானதால் சந்தேகத்தின் பேரில் அவர்களை தேடிச்சென்றனர். வடமதுரை அருகில் உள்ள புத்தூரை சேர்ந்த இளையராஜா(27), வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன்(20) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்ததில் முத்துச்சாமியை கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    முத்துச்சாமி விவசாய பணிகள் செய்து வந்ததால் அவரிடம் அதிகளவு பணம் மற்றும் நகை இருந்துள்ளது. மேலும் அவர்களது மகன் மற்றும் மகள்களும் செல்வாக்கான நிலையில் இருந்துள்ளனர். அருகில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்த இளையராஜா மற்றும் பரமேஸ்வரன் இதனை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    தங்கள் பணத்தேவைக்கு இவரது வீட்டில் கெர்ளளையடிக்க முடிவு செய்து சம்பவத்தன்று சுவர்ஏறி குதித்து உள்ளே சென்றபோது முத்துச்சாமி எழுந்துவிடவே அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் சந்தேகம் வராமல் இருக்க பீரோவில் இருந்த அனைத்து நகை மற்றும் பணத்தை எடுக்காமல் குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.

    இதனைதொடர்ந்து தங்கள் சொந்தஊருக்கு வந்து வேறு இடத்தில் ேவலை பார்த்து வந்தனர். பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் நபர்களை குறிவைத்து கொள்ளையடித்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பிவிடும் நபர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இவர்களுடன் வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×